Published : 20 Apr 2019 01:43 PM
Last Updated : 20 Apr 2019 01:43 PM

4 தொகுதி இடைத்தேர்தல் ஸ்டாலின் ஆலோசனை: மே 1 முதல் சுற்றுப்பயணம்

4 தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மே.1 முதல் 4 தொகுதிகளிலும் ஸ்டாலின் பிரச்சாரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம், உறுப்பினர்கள் மறைவு உள்ளிட்ட காரணங்களால் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. எஞ்சிய தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகியவை வழக்குகளை காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

 சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் திடீர் மரணம் காரணமாக அத்தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட  4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

4 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்டமாக 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கூட்டினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அந்தந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

முதலில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்களுடனும், பின்னர் சூலூர், அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பளர்களுடனும் ஆலோசனை நடக்க உள்ளது.

தொகுதிகளில் உள்ள பிரச்சினைகள், வெற்றி வாய்ப்பு, மற்றக்கட்சிகளின் பலம் பலகீனம், கட்சிக்குள் உள்ள பிரச்சினை, கூட்டணிக்கட்சிகளை பயன்படுத்துவது, பிரச்சார யுக்தி, அளிக்க வேண்டிய வாக்குறுதிகள், வாக்காளர்கள் பற்றிய மதிப்பீடு, அணுகும் முறை, தேர்தல் வேலைகளை பிரிப்பது உள்ளிட்டவை ஆலோசிக்கப்படும் என கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கண்ட நான்கு தொகுதிகளில் வரும் மே 1-ம் தேதிமுதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க இருப்பதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலி பங்கேற்கும் பிரச்சார விபரம்:

மே. 1 ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி

மே.2 ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி

மே.3 திருப்பரங்குன்றம் தொகுதி

மே.4  திருப்பரங்குன்றம் தொகுதி

மே.5  சூலூர் தொகுதி

மே.6  சூலூர் தொகுதி

மே.7  அரவக்குறிச்சி தொகுதி

மே.8  அரவக்குறிச்சி  தொகுதி

8 நாட்கள் நான்கு தொகுதிகளில் தலா 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x