Published : 20 Apr 2019 10:40 AM
Last Updated : 20 Apr 2019 10:40 AM

அவதூறு ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி பொன்னமராவதி பகுதிகளில் கலவரம்- 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

ஒரு சமூகத்தைப் பற்றி அவதூறான ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக, 2 பேர் அவதூறாகப் பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதைக் கண்டித்தும், அதில் பேசிய இருவரையும் கைது செய்தால்தான் தங்கள் ஊரில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல அனு மதிப்போம் எனக் கூறியும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்புக்குடிப்பட்டி கிராம மக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் உறுதி அளித்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

அதன்பிறகு, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கருப்புக் குடிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர். பின்னர், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

உடனே கைது நடவடிக்கை மேற்கொள் வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று உறுதி அளித்ததையடுத்து நள்ளிர வில் மறியல் கைவிடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அதே கோரிக் கையை வலியுறுத்தி, ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பொன்னமராவதி காவல் நிலையத்தை நேற்று மீண்டும் முற்றுகை யிட்டனர். மேலும், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் காவல் நிலையத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன் கலவரத் தில் ஈடுபட்டனர். காவல் துறைக்குச் சொந்தமான 4 கார்கள், 2 வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத் தனர். இச்சம்பவத்தில், 3 போலீஸார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போக்குவரத்து துண்டிப்பு

இதேபோன்று, பொன்னமராவதி அருகே சித்தூர், மீனாட்சிபுரம், குழிபிறை பட்டி, வீரணாம்பட்டி, பனையப்பட்டி, தேனிமலை நமணசமுத்திரம் உட்பட மொத்தம் 50 இடங்களில் மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் போலீஸாரின் பேச்சுவார்த்தையை ஏற்று சில இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டாலும், சில இடங்களில் போராட்டம் தொடர்ந்தது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டதாக சிலரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து பொன்னமராவதி செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. மேலும், பொன்னமராவதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

144 தடை உத்தரவு

தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவு வதால், பொன்னமராவதி காவல் நிலை யத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, ஐஜி வரதராஜூ, டிஐஜிகள் லலிதா லெட்சுமி (திருச்சி), ஜெ.லோகநாதன் (புதுக்கோட்டை), மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் எஸ்.செல்வராஜ், ஜியாஉல்ஹக் உள்ளிட்டோர் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, இலுப்பூர் கோட்டாட்சியர் இரா.சிவதாஸ், 144 தடை உத்தரவை பிறப்பித்தார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: ஏப்.19-ம் தேதி முதல் 21-ம் தேதி இரவு 12 மணி வரை பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு அம லில் இருக்கும். இதன்மூலம், ஒரே இடத் தில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்துக்கு விலக்கு அளிக்கப் படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கம்புணரியில்..

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சமூகத்தினர் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர், சிங்கம்புணரி பகுதிகளில் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு, தடுப்புகளை ஏற்படுத்தினர். எஸ். புதூர், புழுதிப்பட்டி மீனாட்சிபுரம், உலகம்பட்டியில் சிலர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x