Published : 16 Apr 2019 01:17 PM
Last Updated : 16 Apr 2019 01:17 PM

மாநிலத்தில் நம் ஆட்சி; மத்தியில் நாம் கை காட்டும் ஆட்சி: ஸ்டாலின் கடிதம்

மாநிலத்தில் நம் ஆட்சி.  மத்தியில் நாம் 'கை' காட்டும் ஆட்சி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) எழுதிய கடிதத்தில், "25 நாட்களுக்கும் மேலாகத் தமிழகத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் பயணித்து திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்தபோது மக்கள் பொழிந்த அன்பும் மனமுவந்து வழங்கிய ஆதரவும் ஆரவாரமிக்க எழுச்சியான வரவேற்பும் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதில் காட்டிய அசைக்க முடியாத உறுதியும் ஆழ்ந்த பெரும் நம்பிக்கையை அளித்திருக்கின்றன.

அந்த நம்பிக்கை, முழுமையான வெற்றியாகப் பழுத்துப் பலன் தரும் என்ற எதிர்பார்ப்புடன் நான் மட்டுமல்ல, நாடே காத்திருக்கிறது.

பொதுக்கூட்டங்களுக்கு திரண்ட மக்கள் கடல், வாகனப் பிரச்சாரத்தில் கண்ட மக்கள் வெள்ளம், நடந்து சென்று வாக்கு சேகரித்தபோது வெளிப்பட்ட அன்பு அலை என எல்லாவற்றிலும் மத்திய பாசிச பாஜக ஆட்சிக்கும் - மாநில அடிமை அதிமுக ஆட்சிக்கும் எதிரான உணர்வு உறுதியாகத் தெரிந்தது. யாரை எதிர்க்கிறோம் என்பதைத் தங்கள் உணர்வாலும் குரலாலும் சந்தேகத்திற்குத் துளியும் இடமின்றி வெளிப்படுத்திய மக்கள், யாரை ஆதரிக்கிறோம் என்பதையும் தெளிவாகத் திட்டவட்டமாக வெளிப்படுத்தியே இருக்கிறார்கள்.

நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் இரண்டு ஆட்சிகளையும் விரட்டிட வேண்டுமென்றால் தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அளித்தால் தான் நாடும் வீடும் வளமும் நலமும் பெறும், நல்லதொரு ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் அமையும் என்பதை ஒவ்வொரு வாக்காளரின் முகத்திலும் பளிச்செனப் பார்க்க முடிகிறது.

5 ஆண்டுகால பாஜக ஆட்சி, 8 ஆண்டுகால அதிமுக ஆட்சி - அதிலும் குறிப்பாக இந்த 2 ஆண்டு கால அடிமை ஆட்சி இவற்றின் கொடூரத் தாக்கங்களிலிருந்து எப்போது விடுதலை அடைவோம் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை தருவதாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மட்டுமே இருக்கிறது. இது தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல என்பது பொதுமக்களுக்குத் தெரியும்.

கடந்த இரண்டாண்டுகளாக மக்களைப் பல வகையிலும் வாட்டி வதைத்த மத்திய - மாநில ஆட்சியாளர்களின் செயல்களுக்கு எதிராக ஓரணியாக நின்று போராட்டக் களம் கண்ட - பொதுமேடைகளில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகள்தான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியாக வாக்கு கேட்டு வருகிறது என்பதை அறிவீர்கள். உங்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள், எப்போதும் உங்களுடனேயே இருந்தவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது முழுமையான ஆதரவைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்கள் நம்பிக்கையை - உங்கள் எதிர்காலத்தை - நாட்டின் வளர்ச்சியை -மாநிலத்தின் உரிமையை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும். அதற்கு உத்தரவாதமாகத்தான் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டள்ளது.

* மாநிலங்களுக்கு அதிக உரிமை

* மாநிலங்களுக்கு அதிக நிதி

* மாநிலத்தில் வேலைவாய்ப்பு பெருக்கம்

* மாநிலப் பட்டியலில் கல்வி

* நீட் தேர்வு ரத்து

* கல்விக் கடன் ரத்து

* விவசாயக் கடன்கள் ரத்து

* விவசாயிகள் 5 பவுன் வரை வைத்துள்ள நகைக் கடன்கள் ரத்து

* பெண்களுக்கு மக்கள் நலப் பணியாளர் வேலை

* அனைத்து மதத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு

* எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற மக்கள் விரோத திட்டங்களுக்கு மூடுவிழா

* நெசவாளர்கள் - வணிகர்கள் - மீனவர்கள் - தொழில் நிறுவனத்தினர் - தீப்பெட்டித் தொழில், பட்டாசுத் தொழில் நடத்துவோர் என அனைத்து தரப்பினரின் மேம்பாட்டுக்குமான திட்டங்கள், உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுகவின் தேர்தல் அறிக்கை வழங்கியுள்ளது.

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்ற சீரிய முழக்கத்துடன் அதனை நிறைவேற்றிக் காட்டிய தலைவர் கருணாநிதியின் வழி எந்நாளும் நடக்கும் இயக்கம் தந்திருக்கும் தேர்தல் அறிக்கை இது. ஆட்சி அமைந்ததும் சாத்தியமாகக்கூடிய வாக்குறுதிகள் இவை என்பதற்கு அத்தாட்சிதான், இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் 'நீட்' தேர்வு ரத்து, மாநிலப் பட்டியலில் கல்வி, மாநிலங்களுக்கான கூடுதல் உரிமைகள் உள்ளிட்ட பலவும் இடம்பெற்று, திராவிடத்தை தேசியம் தழுவி நிற்பதாகும்.

அத்துடன் இன்னும் முத்தாய்ப்பாக ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6,000 என ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டு இந்தியா முழுவதும் பேராதரவைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் ஒரே குரலில் ஒலிக்கின்றன. அதனால் தான் இதனைக் கொள்கைக் கூட்டணி என்கிறேன். ஒருமித்த உணர்வு கொண்ட மகத்தான ஜனநாயகக் கூட்டணி இது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களும் அவர்களுடன் சேர்ந்திருக்கும் சிலரும் அமைத்திருக்கும் கூட்டணி சந்தர்ப்பவாத -விலைபோன – பணபேர - சுயநலக் கூட்டணி என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். அதில் ஒரு கட்சி 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்கிறது. இன்னொரு கட்சியின் அமைச்சர் 'நீட்' தேர்வு நீடிக்கும் என்கிறார்.

எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த பிறகும் அதனை நிறைவேற்றுவோம் என்கிறார் மத்திய அமைச்சர். மக்கள் எதிர்க்கும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என அதே மேடையிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் உறுதி காட்டத் துணிவில்லை.  எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பாமக சார்பில் அதன் நிறுவனர் ராமதாஸ் அதே மேடையில் இருந்தும் வாய் திறக்க வாய்மையில்லை. இதுதான் ஜனநாயகக் கூட்டணிக்கும் பணபேரக் கூட்டணிக்கும் உள்ள வேறுபாடு.

சொன்னதைச் செய்யும் வலிமை கொண்ட - உறுதி கொண்ட - லட்சிய உணர்வு கொண்ட மக்கள் நலன் காக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை தமிழக - புதுவை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை இது ஒன்றே விளக்கிவிடும். வாக்குறுதிகள் நிறைவேற வாய்ப்பளியுங்கள், வாக்களியுங்கள்!

நாட்டை இருட்டில் தள்ளி பின்னோக்கி இழுத்த பாசிச - அடிமை ஆட்சியை ஒரே சேர விரட்டிட ஏப்ரல் 18-ல் தீர்ப்பெழுதுங்கள்! மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்ட மத்திய - மாநில ஆளுங்கட்சிகளும் அவற்றுடன் கூட்டணியில் உள்ளோரும் தோல்வி பயத்தில் வசவுகளை - அவதூறுகளை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை நோக்கி வீசிப்பார்த்தார்கள். மக்களே கேடயமாக இருந்து அந்த அவதூறு அம்புகளை முனைமுறித்துப் போட்டு விட்டார்கள்.

இப்போது கடைசி அஸ்திரமாக பணம் எனும் ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். கட்சிகளையே பணத்தால் விலை பேசி கூட்டணிக்குள் கொண்டு வந்தவர்கள், வாக்காளர்களாகிய பொதுமக்களையும் விலை பேசிட முடியும் எனக் கருதி 200 ரூபாயில் தொடங்கி, 20 ஆயிரம் ரூபாய் வரை ஓட்டுக்கு விலை வைத்து விநியோகம் செய்து வருகிறார்கள்.

தேர்தல் ஆணையம், காவல்துறை, பறக்கும் படை என்றெல்லாம் சொல்லப்படும் அமைப்புகளில் இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை குறி வைப்பதும், விவசாயிகள் - வணிகர்கள் - ஏழை - நடுத்தர மக்களை மடக்கி சோதனை என்ற பெயரில் பாடாய்படுத்துகிறார்களே தவிர, ஆட்சியில் உள்ளவர்கள் அமைத்துள்ள கூட்டணியின் பண விநியோகத்தைத் தடுக்கவில்லை; தடுக்காதது மட்டுமல்ல அதற்குத் துணை போகிறார்கள்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 650 கோடி ரூபாயை செலவழித்துதான் வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது என்பது ஆதாரபூர்வமாக அம்பலமாகிவிட்டது. இப்போது இன்னும் பல மடங்கு செலவு செய்வார்கள். ஏனென்றால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தங்கள் தலைவர் மகனின் நிறுவனத்துக்கும், தங்களுக்கு சகலமுமாக இருக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்க மத்திய ஆட்சியாளர்களும், கலெக்ஷன் - கரப்ஷன் –கமிஷன் என்பதையே தாரக மந்திரமாகக் கொண்ட மாநில ஆட்சியாளர்களும் ஊழல் பணத்தை வைத்து மக்களெனப்படும் மகேசர்களையே விலைக்கு வாங்கிடக் களமிறங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் எத்தனை மடங்கு பணத்தை இறைத்தாலும், அதைவிட பல மடங்கு எதிர்ப்பலை ஆட்சியாளர்களை நோக்கி வீசி அவர்களைத் திக்குமுக்காட வைக்கிறது. அதே நேரத்தில் மக்களின் ஆதரவு அலை, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத் தழுவி வீசுகிறது. ஜனநாயக ரீதியாக மகத்தான வெற்றியை வழங்க மக்கள் தயாராகிவிட்டார்கள். அதனைப் பத்திரமாக சேகரித்துப் பக்குவமாக ஒருமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக வாக்குகளைச் சூறையாடும் களவாணிக் கூட்டமாக ஆட்சியாளர்களின் கூட்டணி இருக்கிறது. வாக்குகளை விலை பேசுவதும், வாக்குச்சாவடியைக் கைப்பற்றத் திட்டமிடுவதும், மத உணர்வுகளைக் கிளறிவிட்டு வன்முறைக்கு வழிவகுப்பதும் தோல்வி பயத்தில் தோய்ந்துள்ள அவர்களின் இறுதிக்கட்ட உபாயங்களாக இருக்கின்றன.

நாம் உறுதியுடன் இருந்தால், தலைவர் கருணாநிதி கற்றுத் தந்துள்ள அணுகுமுறையுடன் ஜனநாயகத் தேர்தல் களத்தை சந்தித்தால், வெற்றி ஒன்றே இலக்கு என ஒவ்வொரு தொகுதியிலும் அதற்குள் அடங்கியுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், ஒவ்வொரு வாக்கையும் கொண்டு வந்து சேர்ப்பதிலும் கவனம் செலுத்தினால் நாடும் நமதே.. .நாற்பதும் நமதே... ஏப்ரல் 18-ல் நடைபெறும் 18 தொகுதி இடைத்தேர்தலுடன் மே 19-ல் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் முழு வெற்றி நமக்கே!

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை விரும்பிடும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், உடன்பிறப்புகள் - கழக நிர்வாகிகள் -வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்டோர் விழிப்புடன் செயல்பட்டாக வேண்டியது கட்டாயம். பாசிச ஆட்சியையும் அடிமை ஆட்சியையும் வீழ்த்தும் வல்லமை கொண்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியைத் தடுக்கும் மறைமுக நோக்கத்துடன் களமிறங்கியிருக்கும் ச(க்)திகளின் பக்கம் ஒரு சில வாக்குகள் மடைமாறாதபடி செயல்பட்டு, சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கிணங்க ஒவ்வொரு வாக்கையும் சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு அனைத்து தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி காண  அயராமல் உழைத்திடுவீர்!

மக்கள் மனதில் வெற்றிச் சின்னங்களாகப் பொறிக்கப்பட்டுள்ள உதயசூரியன் சின்னத்திற்கும் தோழமைக்கட்சிகளின் சின்னங்களான கை, கதிர் அரிவாள், சுத்தியல் அரிவாள் நட்சத்திரம், ஏணி, பானை ஆகிய சின்னங்களுக்கும் வாக்குகளை உறுதி செய்திடுவீர்! மாநிலத்தில் நம் ஆட்சி- மத்தியில் நாம் 'கை' காட்டும் ஆட்சி என்ற தீர்ப்பு, மே 23-ல் வெளியாகட்டும்.

அதனை நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது திருவடிகளில் காணிக்கையாக்குவோம்! தமிழ் மாநில நலன் பேணும் அந்த அரிய வாய்ப்பை வழங்கிட வேண்டுமென, உங்களில் ஒருவனாக - கருணாநிதியின் மகனாக - உழைப்பதைத் தவிர வேறெதையும் அறியாதவனாக - உடன்பிறப்புகள் அனைவரையும், வாக்காளர்களான பொதுமக்களையும், பாதமலர் தொட்டு வணங்கி, பணிவன்புடன் வேண்டுகிறேன்! வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு நல்வாய்ப்பு தாருங்கள்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x