Published : 13 Apr 2019 12:01 PM
Last Updated : 13 Apr 2019 12:01 PM

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்தால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படும். என தேனியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேமுதிக, தமாகா, பாமக எனக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் பிரதமர் மோடி.

பிரச்சாரத்துக்காக வந்த அவரை வரவேற்ற துணை முதல்வர் ஓபிஎஸ் நினைவுச் சின்னம் வழங்கி வரவேற்றார். பின்னர் பேசிய ஓபிஎஸ், "தேசத்தின் காவலனான சவுக்கிதாரை வரவேற்கிறேன்.

இந்தத் தேர்தல் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான தேர்தல். ஜனநாயக குருஷேத்திரம் நடக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ஏனெனில், பிரதமர் மோடியால்தான் உலகளாவிய கம்பீரப் பார்வை இந்தியா மீது பதிவாகியிருக்கிறது. நமது பிரதமர் கம்பீர பிரதமர். அவர் சிறுபான்மையின மக்களின் உண்மையான நண்பர்.

மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். பாஜக - அதிமுக கூட்டணிக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. திமுக மேற்கொண்டுள்ள கூடா நட்பு கூட்டணியை இந்தக் கூட்டணி வீழ்த்தும். பிரதமர் மோடியின் ஆட்சியில் மதக்கலவரங்கள் இல்லை. தீவிரவாத தாக்குதல்கள் இல்லை. தேசத்தின் பொருளாதரம் வளர்ந்திருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் அருளால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன்" எனப் பேசினார்.

தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் ஓபிஎஸ்.ஸின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பேச்சு:

தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டப்படும். இது விவசாயிகளுக்குப் பாதகமாக அமையும். தமிழகத்தை பாலைவனமாக்கத்தான் ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தாரா?.

ஆனால், மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படும். திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் அது தமிழகத்துக்கு பாதகமாக அமைந்துவிடும்" எனக் கூறி அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x