Last Updated : 13 Apr, 2019 10:11 AM

 

Published : 13 Apr 2019 10:11 AM
Last Updated : 13 Apr 2019 10:11 AM

வேட்டியால் உருவான தொழில் சாம்ராஜ்யம்!- `ராம்ராஜ் நிறுவனர் நாகராஜ்

உடையைக் கண்டுபிடித்த பிறகுதான் மனிதன் நாகரிகம் அடைந்தான். சமூகத்தின் பண்பாடு, வளம், கற்பனைத் திறம், கலையுணர்வு, தட்பவெப்ப நிலை உள்ளிட்ட அம்சங்களால் ஆடைகள் நெய்யப்படுகின்றன. சுதந்திரப் போராட்டத்தில் கைராட்டை சுழற்றி, கதர்த் துணியை ஆயுதமாக ஏந்தி வென்றோம். இப்படி, பண்பாட்டின் வலிமையால்தான் இந்தக்  காலத்திலும் வேட்டி விற்பனையில் வெற்றி நடைபோடுகிறோம்" என்கிறார் நாகராஜ். `ராம்ராஜ் காட்டன்' நிறுவனத்தின் வளர்ச்சியில்  30,000 நெசவாளர் குடும்பங்களையும் இணைத்துக் கொண்டு, தனது வெற்றியை, நெசவுக் குடும்பங்களின் வெற்றியாக மாற்றியதே இவரது சாதனை.

"திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கத்துல கைக்காட்டி புதூர்னு சின்ன கிராமம்தான்  பூர்வீகம்.  சின்ன வயசுலே துறுதுறுனு இருப்பேன். குறும்பு  செய்த  நேரம் போக,  மிச்ச  நேரம்  இருந்தா பள்ளிகூடம் போவேன். பத்தாம் வகுப்போட படிப்பு போதும்னு முடிவுக்கு வந்துட்டேன். எங்க ஊருக்குள்ள ஒருத்தர் அம்பாசிடர் கார்ல, வேட்டி, சட்டையில் கம்பீரமா போனார். அவர் யார்னு விசாரிச்சப்ப, ஜவுளி வியாபாரம் பண்றவர்னு சொன்னாங்க. ஜவுளி வியாபாரம் பண்ணா, நாமளும் கார்ல போகலாம்னு விளையாட்டுத்தனமா ஒரு விஷயம் மனசுல பதிஞ்சது. அதுதான் முதல் விதை.

அங்க, இங்கனு வேலை பார்த்து, கடைசில ஒரு வேட்டி விக்கிற கடையில, மார்க்கெட்டிங் வேலை கிடைச்சது.  `ஆந்திராவுக்குப் போய் வேட்டி ஆர்டர் புடிச்சிட்டு வா'னு அனுப்பிவிட்டாங்க. அந்த இருபது வயசுல,  ஆந்திரா எந்த  திசைனுகூட தெரியாது.  தெலுங்குல பேசினாதான், அங்கே முகம் பார்த்து சிரிக்கவே செஞ்சாங்க.

ஆந்திராவில் மார்க்கெட்டிங்...

‘வெள்ளை வேட்டி கட்டிட்டு, கார்ல ஊருக்குள்ள போகணும்’ங்கிறதுதான் ஒரே லட்சியம். அந்த லட்சியத்தை நிறைவேத்த சைனாவுக்கு அனுப்பினாலும், சரினு போய் வெறித்தனமா  வேலை செஞ்சிருப்பேன்.  ஆந்திரா முழுக்க சுத்தி ஆர்டர் எடுத்தேன்.  35 வருஷத்துக்கு முன்னால  என்னோட முதல் மாத ஆர்டர்  தொகை ரூ.17  ஆயிரம். 18 மாதத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் எடுத்துட்டுப்போய் நின்னதும், கம்பெனியோட செல்லப் பிள்ளையா மாறினேன்.

வேலையைத் தொடங்கும்போது, ஒண்ணுமே நமக்கு தெரியலையேனு நினைச்சிருந்தா,  திருப்பூரில் ஒரு பனியன்  கம்பெனியில் வேலை செய்துகொண்டிருப்பேன்  தெரிஞ்சிக்க இவ்ளோ விஷயம் இருக்கானு பாசிட்டிவாக நினைத்தால்,  வேலை செய்ய சலிப்பே வராது. வேட்டிங்கிறது வெறும் உடை இல்ல, நம்ம பண்பாடு என்கிற உண்மையைப் புரிஞ்சிகிட்டேன். மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்த காலத்தில், தரமான பொருளுக்கு எப்போதுமே வரவேற்பும், மதிப்பும் கிடைப்பதை கண்கூடாகப் பார்த்தேன்.

ஒத்துவராத நண்பர்கள்!

சொந்தமா தொழில் தொடங்கலாம்னு நம்பிக்கை வந்தது. தனியா தொழில் தொடங்கத்  தேவையான முதலீட்டுப் பணம் இல்லை. என் உழைப்புமேல நம்பிக்கை வெச்சி, சில நண்பர்கள் இணைந்து, தொழில் தொடங்க முன்வந்தாங்க.  எந்த நேரமும் தொழிலைப் பற்றிய சிந்தனையோடு இருக்கவேண்டிய நிலையில் நானும், எப்போதாவது தொழிலை கவனித்தால் போதும் என்கிற மனநிலையில் நண்பர்களும் இருந்ததால், ஒத்துப்போகலை. ராத்திரி  பகலாக  உழைத்து  சேர்த்த பணத்தை,  கேளிக்கைகளில் செலவழிக்கிறதுலேயே ஆர்வமா இருந்தாங்க. கிடைத்த லாபத்தை மீண்டும் மூலதனமாக்கி, தொழிலை விரிவாக்க அவங்களுக்கு ஆர்வம் இல்லை. இதனால், நண்பர்களோடு சேர்ந்து பயணிக்க முடியாத மனநிலைக்கு வந்தேன்.

`நான் தனியாக தொழில் செய்துகொள்கிறேன்.  என் பங்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க’னு கேட்டதும், நான்கு மாதங்கள் எந்தவித பதிலும் சொல்லாமல் அலைக்கழிப்பு நடந்தது. `இனி தனியாளாக மட்டுமே தொழில் செய்ய வேண்டும்' என்ற  பாடத்தை அவங்கதான் சொல்லிக்கொடுத்தாங்க. அறுபதாயிரம்  ரூபாய்  வரவேண்டிய பங்குக்கு, விற்பனையாகாமல் தேங்கியிருக்கும் வேட்டிகளைக் கொடுத்து என் கணக்கை நேர் செய்தார்கள். அதுதான் என்னோட மூலதனம். அதை வித்து, பணத்தை எடுத்து, தொழில் தொடங்க வேண்டும்.

வேட்டி மீது வைத்த நம்பிக்கை!

ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் திருப்பூரில் நல்ல வளர்ச்சியை எட்டியிருந்தது. அந்த சூழலில், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் ஏற்றுமதித் தொழில் செய்யவே முயற்சி செய்வார்கள். அத்தகைய சூழலில்,  பாரம்பரிய உடையான வேட்டியை  விற்பனை செய்யப் போகிறேன் என்று யாரிடம் சொன்னாலும், போகாத ஊருக்கு வழிதேடுவதாக நினைத்தனர். எதையும் காதில் வாங்காமல், நம்பிக்கையோடு என் முயற்சியைத் தொடங்கினேன்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளானு தென்னிந்திய மாநிலம் முழுவதும், ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன்.  அப்போது, பல கடைகளில், பிராண்ட் மதிப்பு இருக்கிற துணிகளை முன்வரிசையில் வைத்தும், பிராண்ட் இல்லாத துணிகள், தரமான தயாரிப்பாக இருந்தாலும் மதிப்பு குறைவாகக் கருதி, கண்ணில் படாத கீழ் வரிசையிலும் வைத்து விற்பனை செய்வதை கவனித்தேன். அப்போது, பல கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படுகிற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே பிராண்ட் நேம் வைப்பது வழக்கமாக இருந்தது.

உருவானது `ராம்ராஜ்'...

இருக்கிற வேட்டிகளை எப்படியாவது விற்று பணமாக்கிவிட்டால் போதும் என்ற நிலையில் இருந்த நான், ஒரு பிராண்ட் பெயர் வைக்க முடிவு செய்தேன். அப்பாவின் பெயர் ராமசாமி. என்னுடைய பெயர் நாகராஜ். இரண்டு பெயர்களையும் இணைத்து ‘ராம்ராஜ்’ என்று பெயரை வைத்து, வேட்டிகளை விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

'வாப்பா, ராம்ராஜ்' என்று என்னை அடையாளப்படுத்தி கடைக்காரர்கள் அழைக்கும்போது, என் காதில் இன்பத்தேன் பாயும். அதுவே என்னோட அடையாளமாகி, இந்தியாவின் நம்பர்-1 பிராண்டாக மாறும் என்று அப்போது எனக்குத் தெரியாது.

தொழிலில் நேர்மையும், பணிவும் என்னை எல்லா காலங்களிலும் காப்பாற்றி இருக்கு. என்னிடம் உள்ள பொருளை விற்க போனபோது, பெரும்பாலான கடைக்காரர்கள், நான் வேலை பார்த்த பழைய நிறுவனத்தின் பெயரில் ஆர்டர் கொடுத்தனர். `இந்த ஆர்டரை அந்த நிறுவனத்துக்கு போஸ்ட் செய்துவிடுகிறேன். அடுத்தமுறை ஆர்டர் கொடுக்கும்போது என் நிறுவனத்துக்குத் தரவேண்டும்' என்று சொன்னதும், நான் உண்மையைப் பேசியதைப் பாராட்டி எனக்கு ஆர்டர் கொடுத்தனர்.

கண் கலங்க வைத்த பதில்!  

ஆந்திராவில் ஒரு கடை முதலாளி எத்தனைமுறை போனாலும்,  எனக்கு ஆர்டர் தரமாட்டார். ஆனாலும், அவரைப் பார்த்து  வணக்கம் சொல்லாமல் நான் வரவே மாட்டேன். ஒருநாள், ஏதோ கோபத்தில் இருந்தவர் என்னைப் பார்த்ததும் கடுமையாகத்  திட்டிவிட்டார். `ஏன்யா, உனக்கெல்லாம்  ஒரு  தடவை சொன்னா  புரியாதா? வாட்ச்மேன்கிட்ட சொல்லி உன்னை  உள்ளே விடக்கூடாதுனு  சொன்னாதான் தொந்தரவு பண்றதை நிறுத்துவியா?' என்று ஒருமையில் பேசிவிட்டார். மிகப் பொறுமையாக நான் அவரிடம் சொன்னேன். `சார், நான் உங்களிடம் வந்து  வணக்கம்  சொல்லிட்டு  ஆர்டர் எடுக்கப்போனா,  நிறைய ஆர்டர் கிடைக்குது. நீங்க எனக்கு ஆர்டர் தரவே இல்லைன்னாலும் பரவாயில்லை. நான் உங்களுக்கு வணக்கம் சொல்வதை மட்டும் தயவுசெய்து தடுக்க வேண்டாம்'னு  பணிவாகவும்,  பொறுமையாகவும் சொன்னேன். அவருக்கு கண் கலங்கிவிட்டது.  அதற்குப் பிறகு எனக்கு 35 வருடங்களாக  ஆர்டர்  வழங்கி வருகிறார்.

கையில் இருக்கும் வேட்டிகளை விற்றுமுடித்த போது பாராட்டியவர்கள், அப்படியே ஏற்றுமதி தொழிலுக்கு மாறிவிடு என்றும் ஆலோசனை சொன்னாங்க. இனிவரும் காலங்களில் கல்யாணத்துக்கு வேட்டி கட்டுவதுகூட நின்றுவிடும் என்பதே பலரின் கணிப்பு. சராசரியாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களே வேட்டி கட்டும் பழக்கமுடையவர்களாக இருந்தனர்.

இருக்கிற வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைகிற, வருங்காலத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உருவாக மாட்டார்கள் என்கிற நிலையில் உள்ள தொழிலில் எப்படி முன்னேற முடியும்?  திருப்பூரில் ஆயிரம் பேர் ஏற்றுமதி தொழில் செய்யும்போது, நான் தனியாளாக வேட்டிக்கு பிராண்ட் பெயர் வைத்து, விற்பனை செய்ய முடிவு செய்தேன். அந்த காலகட்டத்தில், அது கிட்டத்தட்ட தற்கொலை முடிவுதான் என்று நினைத்தார்கள். அதில் உண்மை இல்லாமலும் இல்லை.

வங்கியில் பணம் எடுக்கப் போனால், பேண்ட் அணிந்து வரும் ஒரு நிறுவனத்தின் அலுவலக உதவியாளரை வங்கியின் மேலாளர் உள்ளே அழைத்து உட்கார வைத்து,  உபசரிப்பு செய்வார். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக வேட்டி கட்டிக் கொண்டு போனால், என்னை வெளியே உட்கார வைப்பார்கள். வேட்டி கட்டுபவர்கள் படிக்காதவர்கள், ஏழைகள், கிராமத்து மனிதர்கள் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. நவீன உடைகளின்மீது மக்கள் மோகமாக இருந்தார்கள். இளைஞர்களை வேட்டி கட்ட வைத்தால் மட்டுமே தொழிலில் ஜெயிக்க முடியும் என்கிற சவாலை துணிந்து ஏற்றுக்கொண்டேன்.

பிஹாரில் கிடைத்த அடி...

தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில், சிக்கனமான வாழ்க்கை முறையே பாதுகாப்பாக இருந்தது. ஒரு டீ அதிகம்  குடிக்கப்  பழகினாலும், பிறகு  நஷ்டம்  தவிர்க்க முடியாத விருந்தாளியாகிவிடும். வரவேண்டிய சில ஆயிரம் ரூபாய் ஒரு வாரம் தாமதமாக வந்தாலே, வட்டிக்குக் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்த எனக்கு, ஒரேயொரு ஆர்டரில் ரூ.3 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.  பிஹாரிலிருந்து ரூ.3 லட்சத்துக்கு ஆர்டர் வந்தது. ஒரு வருடம் செருப்புத் தேய அலைந்து மார்க்கெட்டிங் செய்தாலும், விற்கமுடியாத அளவுக்கு அது  பெரிய ஆர்டர். ஆசை லேசாக கண்ணை மறைத்தது. யாரையும் துருவி ஆராய்ந்து ஆர்டர் எடுக்கும் என் வழக்கத்தை விட்டு, முகம் தெரியாத ஒரு வாடிக்கையாளரை நம்பினேன்.  பொருளை நாங்கள் அனுப்பிவிட்டு, ரசீதை வங்கிக்கு அனுப்புவது நடைமுறை.

வங்கியில் பணத்தைக் கட்டினால்தான்,  பொருளை வாடிக்கையாளர் எடுக்க  முடியும்.  நேர்மையாக இருப்பவர்களுக்கு ஒரு வழி என்றால், ஏமாற்றுகிறவர்களுக்கு ஆயிரம் வழி இருக்கும். வங்கி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து, பணம் கட்டாமலேயே பொருளை எடுத்துக்கொண்டனர்.  இந்த மோசடிக்கு விலையாக  பெரும் உழைப்பை ஈடாகக் கொடுத்து நிமிர்ந்து எழுவதற்குள், அடுத்த இடி இன்னும் அழுத்தமாக விழுந்தது.

"நாகரிகம் மாறுகிறது; இனி வேட்டி கட்ட ஆள் இல்லை"  என்று அக்கறையுள்ள நண்பர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தினர். தொழிலில் ஒரு சரிவு ஏற்பட்டதும், நானும் அதை நம்பத் தொடங்கினேன். ஒருவேளை வேட்டி கைவிட்டால், அடுத்த பிடிப்பு என்னவென்ற  யோசனை அதிகமானது.

எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய மோசடி!

திருப்பூரின் அடையாளமாக இருக்கிற ஏற்றுமதி தொழிலில் நானும் இறங்கினேன். ஒருபக்கம் வேட்டிக்கு மதிப்பு கூட்டும்விதமாக, தரமான தயாரிப்புகளை சமரசமின்றி உருவாக்கினேன். அதற்கு கடைக்காரர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்னொரு பக்கம், அனுபவமில்லாத ஏற்றுமதி தொழிலில் தடுமாறிக் கொண்டிருந்தேன். உள்ளூர் சந்தையிலேயே தரமான பொருளை விற்க நினைத்த எனக்கு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற தயாரிப்புகள் உலகத் தரமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கர்நாடகாவிலிருந்து இடைத்தரகர் மூலம் பெருந்தொகைக்கு நூலை வாங்கினேன். என்னிடம் காட்டிய நூலின் தரமும், அனுப்பி வைத்த நூலின் தரமும் வேறாக இருந்தது. அனுப்பியுள்ள நூல் தரமற்றதாக இருக்கிறது என்று தரகரிடம் புகார் செய்ததும், அதை திருப்பி அனுப்பிவிடும்படி சொன்னார். நானும் அதை அவர் சொன்ன முகவரிக்கு திருப்பி அனுப்பிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கினேன்.

ஓராண்டு கழித்து, தரமற்ற நூலை எங்களுக்கு அளித்த நிறுவனத்திடமிருந்து நீதிமன்ற நோட்டீஸ் வந்தது. நாங்கள் நூல் வாங்கியதற்கான அத்தாட்சி அவர்களிடம் இருந்தது. நாங்கள் திருப்பி அனுப்பியதற்கான அத்தாட்சி எங்களிடம் இல்லை. இடையில் தரகர் எங்கள் இருவரையும் ஏமாற்றிய விவரத்தை ஒரு வருடம் கழித்து தெரிந்துகொண்டோம். அவ்வளவு பணத்தையும் வட்டியும், முதலுமாகத் தரவேண்டிய கட்டாய  சூழல். ஒரு கோடி ரூபாய் இழப்பு என்பது தாங்க முடியாத பேரிடி. 

கைவிட்டுவிடும் என்று நினைத்த வேட்டி விற்பனை ஏறுமுகத்தில் இருந்தது.  பிரச்சினை வந்தால் காப்பாற்றிவிடும் என்று நம்பிய ஏற்றுமதி தொழில் மூலம் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டது. வருங்காலத்தைப் பற்றிய கனவில் இருந்த எனக்கு, நிகழ்காலமே கேள்விக்குறியானது...

இடைவேளை...நாளை வரை...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x