Published : 12 Apr 2019 05:29 PM
Last Updated : 12 Apr 2019 05:29 PM

அண்ணாவும் கருணாநிதியும் இருந்திருந்தால் ராகுல் காந்தியை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்கள்: ஸ்டாலின் பேச்சு

அண்ணாவும் கருணாநிதியும் இருந்திருந்தால் ராகுல்காந்தியை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை), சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

"காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட உடன், உடனடியாக டெல்லிக்குப் பறந்து வந்து ராகுல் காந்திக்கு என்னுடைய வாழ்த்துகளைச் சொல்ல வேண்டும், மாலை அணிவித்துப் பாராட்ட வேண்டும் என்று கருதினேன். திராவிட இயக்கத்தின் எண்ணங்களை அப்படியே ராகுல் காந்தி அந்தத் தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்துள்ளார்.

எப்படி திமுக தேர்தல் அறிக்கை ஒரு ஹீரோ போன்று உள்ளதோ, அதுபோல் ராகுல் காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கின்றது. அண்மையில் வெளியிட்ட மோடியின் தேர்தல் அறிக்கை ஜீரோவாக இருக்கின்றது.

மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய அறிவிப்புகளை, திட்டங்களை எப்படி மாநிலத்தில் இருக்கக்கூடிய ஒரு கட்சி சொல்லலாம்? ஸ்டாலின் என்ன பிரதமராக வரப் போகின்றாரா? என்றெல்லாம் விமர்சனம் செய்த ஒரு சூழ்நிலை இருந்தது.

இது எனக்குத் தெரியாதா?

மத்தியில் நாம் கை காட்டக்கூடிய ஆட்சிதான் வரப்போகின்றது. ராகுல் காந்தி தான் பிரதமராக வந்து அமரப் போகிறார். எனவே, அந்த தைரியத்தில், அந்த நம்பிக்கையில் தான் தேர்தல் அறிக்கையில் அவை எல்லாவற்றையும் இன்றைக்கு சேர்த்து வெளியிட்டிருக்கின்றோம்.

ராகுல் காந்தி வெளியிட்டு இருக்கக்கூடிய தேர்தல் அறிக்கையே அதற்கு சாட்சியாக அமைந்திருக்கின்றது.

நான் சிலவற்றைச் சொல்கின்றேன்.

* விவசாயிகளின் கடன் ரத்து.

* மாணவர்களின் கல்விக் கடன் ரத்து.

* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

* விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்.

* ஜி.எஸ்.டி வரியை எளிமைபடுத்துகின்ற திட்டம்.

* தமிழக மீனவர்களின் பிரச்சினை.

* கல்வியை மாநிலப் பட்டியலில் இணைப்பது.

எல்லாவற்றையும் தாண்டி மாநில உரிமையைப் பெற்றுத் தருவது என்ற ஒரு அருமையான உறுதிமொழியை தேர்தல் அறிக்கையில் ராகுல் காந்தி தந்திருக்கிறார்.

எனக்கு ஒரு மிகப்பெரிய கவலை வந்தது. என்ன கவலை என்றால், இதைப்பார்த்து ரசிக்க, மகிழ்ச்சி அடைய, அண்ணா இல்லையே! தலைவர் கலைஞர் இல்லையே என்ற அந்தக் கவலை என்னை ஆட்கொண்டது.

அவர்கள் இருந்திருந்தால் ராகுல் காந்தியை உச்சிமுகர்ந்து பாராட்டி அவர்களுடைய வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்திருப்பார்கள்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x