Published : 11 Apr 2019 07:36 PM
Last Updated : 11 Apr 2019 07:36 PM

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளின் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக் கழகம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக் கழகம்.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (27). அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (24) ஆகியோருடன் சேர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை மடக்கி அவர்களைப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்தனர்.

அந்த வீடியோவைக் கொண்டு அந்தப் பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவர்களிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றை பறிப்பதைத் தொழிலாகச் செய்து வந்தனர். தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த மேற்கண்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் மணிவண்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க போலீஸார் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாளுக்கு நாள் மக்களின் கோபாவேசம் காரணமாக போலீஸ் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஆனாலும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. விசாரணை சிபிஐக்கு மாற்றி அரசு பரிந்துரைத்தது. சிபிஐ விசாரணையை ஏற்கும்வரை சிபிசிஐடி விசாரணை தொடரும் என கூறப்பட்டது.

கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதனால் அவர்கள் ஓராண்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில் குண்டர் சட்டத்தை உறுதி செய்யவும், குற்றவாளிகளுக்கு தங்கள் தரப்பைக் கூறி குண்டர் சட்டத்தை ரத்து செய்யும் வாய்ப்பாக  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தி வாதத்திற்குப் பின்னர் முடிவெடுக்கப்படும்.

அதன் அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இங்கு வழக்கறிஞர் வைத்து வாதாட முடியாது. அவரவர் நியாயத்தை அவரவர் நேரடியாக எடுத்துரைப்பார்கள்.

குண்டாஸ் அறிவுரைக் கழகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராமன், உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி, ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி ஆகியோர் முன் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டாஸ் சரியா? என்பது குறித்து இக்குழு விசாரணை நடத்தியது. விசாரணையில் 4 பேர் மீதான குண்டர் சட்டம் போடப்பட்டது சரிதான் என உறுதி செய்தது அறிவுரைக் கழகம்.

இதன்மூலம் கைதான 4 பேரும் ஓராண்டு சிறைவாசம் அனுபவிப்பார்கள். அவர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x