Published : 11 Apr 2019 06:07 PM
Last Updated : 11 Apr 2019 06:07 PM

உங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?- மோடி குறித்து குஷ்பு கிண்டல்

மோடி வாரணாசியில் போட்டியிடுவது குறித்து பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு  வந்தால் தக்காளி சட்னியா? என்று விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் குஷ்புவுக்கு சீட் கிடைக்காததால் அவர் பிரச்சாரத்துக்குச் செல்வதில்லை என்று செய்திகள் பரவின. இதுதொடர்பாக தனியார் செய்தி சேனலுக்குப் பேட்டி அளித்தார் குஷ்பு.

அப்போது அவர் கூறியதாவது:

''நான் போட்டியிட வேண்டும் என்று சொன்னேனா? எனக்கு இதுபோன்ற வதந்திகள் புதிதில்லை. திமுகவில் இருக்கும்போது 2011-ல் இதே பேச்சு வந்தது. அதேபோல 2014, 2016 மற்றும் 2019 வரை இதே பேச்சு தொடர்கிறது. எனக்குப் பழகிவிட்டது.

ஒவ்வொரு முறையும் சீட் கொடுக்கப்படவில்லை; அதனால் குஷ்பு வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். நான் எப்போது சீட் கேட்டேன்? திமுகவில் இருந்தபோதும் சரி, காங்கிரஸில் இருக்கும்போதும் சரி, நான் சீட் கேட்கவில்லை.

நான் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் என்பதால் அது தொடர்பான பணிகள் இருக்கின்றன. பல்வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. தேசியப் பொறுப்பில் இருப்பதால் இந்தியா முழுவதும் செல்கிறேன்..

அதற்காக நான் செல்லுமிடமெல்லாம் தண்டோரா போடமுடியாது. 'நானும் ஜெயிலுக்குப் போறேன்.. நானும் ஜெயிலுக்குப் போறேன்' என்று. நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. என்னுடைய வேலை குறித்துக் கட்சிக்குத் தெரியும்.

எல்லா இடத்திலும் மோடி அலை வீசுகிறது என்கிறார்களே, நான் சவால் விடுக்கிறேன், மோடிக்கு தமிழகத்தில் போட்டியிட தைரியம் உள்ளதா? 2014-ல் மோடி ஏன் வாரணாசியில் போட்டியிட்டார்? குஜராத்திலேயே ஒரு தொகுதியில் போட்டியிட்டிருக்கலாமே! ஏன் குஜராத்தை விட்டுவிட்டு வாரணாசிக்கு ஓடினார்? உங்களுக்கு அடிபட்டால் ரத்தம், எங்களுக்கு அடிபட்டால் தக்காளி சட்னியா?

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் இரண்டும் எங்களின் கோட்டை என்றீர்கள்; இப்போது ஒரேயொரு கோட்டை உத்தரப் பிரதேசம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அதையும் இந்தத் தேர்தலில் வென்றுவிடுவோம். எந்தக் காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது'' என்றார் குஷ்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x