Last Updated : 08 Apr, 2019 12:00 AM

 

Published : 08 Apr 2019 12:00 AM
Last Updated : 08 Apr 2019 12:00 AM

தங்கள் கட்சி வேட்பாளர்களின் பெயர் கொண்ட சுயேச்சைகளுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கீடால் அமமுகவுக்கு நெருக்கடி: எதிர்க்கட்சியினரின் வியூகம் கைகொடுக்குமா?

தேர்தலில் வாக்காளர்களை குழப்புவதற்காக, பிரதான வேட்பாளரின் பெயர் கொண்ட சுயேச்சைவேட்பாளர்களை நிறுத்துவதென்பது எதிர்க்கட்சிகள் கையாளும் ஒரு யுக்தி.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது விசிக தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு, டி.திருமாவளவன் என்ற பெயரில் சுயேச்சை வேட்பாளர் நிறுத்தப்பட்டார். தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்குகளும், தொல்.திருமாவளவன் 48,363 வாக்குகளும் பெற்றனர். 87 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுயேச்சை வேட்பாளர் டி.திருமாவளவன் 289 வாக்குகள் பெற்றது தொல்.திருமாவளவனின் வெற்றியைப் பறித்தது.

அதேபோல, வாக்குகளைப் பெற மக்கள் மனதில் பதிந்த சின்னங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்ட அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் வெற்றிபெற்றார். இதையடுத்து, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும்மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு‘குக்கர்’ சின்னம் ஒதுக்கக் கோரி அமமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அமமுகவுக்கு பொதுச் சின்னமாக ‘பரிசுப்பெட்டி’ ஒதுக்கப்பட்டது. இதனால், அமமுக வேட்பாளர்களின் பெயர் கொண்ட சுயேச்சைகள் ‘குக்கர்’ சின்னத்தை கேட்டுப் பெற்றுள்ளனர். திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுகிறார். அங்கு பி.காமராஜ் என்ற சுயேச்சை வேட்பாளருக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சுயேச்சை வேட்பாளரான பி.காமராஜூக்கு ‘காலிபிளவர்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரூரில் அமமுக சார்பில் ஆர்.முருகன் போட்டியிடுகிறார். அங்குசுயேச்சை வேட்பாளரான பி.முருகனுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டிபட்டியில் அமமுகசார்பில் டி.கே.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். சுயேச்சையாக போட்டியிடும் சி.ராஜேந்திரனுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.முத்துக்குமாருக்கு எதிராக சி.முத்துக்குமார் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் எஸ்.முத்தையாவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் ஆர்.முத்தையாவுக்கு ‘தொப்பி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் அமமுக ரெங்கசாமிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும் ரெங்கசாமிக்கு ‘தொப்பி’ சின்னம்ஒதுக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தினகரனுக்கு ‘தொப்பி’ சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐந்து ‘சுப்ரமணியன்’பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் வெற்றிவேலுக்கு எதிராக ஜி.வெற்றிவேல், பி.வெற்றிவேல் என ஒரே பெயர் கொண்ட2 சுயேச்சைகள் களமிறக்கப்பட்டுள்ளனர். சாத்தூரில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுப்ரமணியனுக்கு எதிராக சுப்ரமணியன் என்ற பெயர் கொண்ட 5 சுயேச்சைகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பொன்னுத்தாய் என்றபெயர் கொண்ட 3 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியினரின் இந்த யுக்திகளால் கணிசமான வாக்குகள் பிரியக்கூடும் என்பதால், பரிசுப் பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டுசெல்ல அமமுகவினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டதற்கு, “சுயேச்சை வேட்பாளர்களுக்கென 198 சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதில் ‘பிரெஷர் குக்கர்’ சின்னமும் ஒன்று.

சுயேச்சைகள் வேட்புமனு தாக்கலின்போது 3 சின்னங்களை குறிப்பிட்டு அதில் முன்னுரிமை அடிப்படையில் ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு கோரலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட சுயேச்சைகள் ஒரே சின்னத்தை கோரினால், குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x