Last Updated : 07 Apr, 2019 06:13 PM

 

Published : 07 Apr 2019 06:13 PM
Last Updated : 07 Apr 2019 06:13 PM

கேரளத்தில் ராகுல் போட்டியால் புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் குழப்பம்

கேரளத்தில் ராகுல் போட்டியால் புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் குழப்பம் நிலவுகிறது. கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவு தங்களுக்கு என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ள சூழலில் இது பொய் என்று சிபிஎம் மறுத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளத்தில் வயநாட்டில் போட்டியிடுகிறார். இதையடுத்து சிபிஎம் காங்கிரஸுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

அதேநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் திமுக, சிபிஎம்-சிபிஐ கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியை ஆதரிக்கும் காங்கிரஸ், கேரளத்தில் எதிரணியில் இருப்பதால் புதுச்சேரிக்கு அதிகம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில் தமிழகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலும், கேரளத்தையொட்டி மாஹேயும், ஆந்திரத்தையொட்டி ஏனாமும் உள்ளன. தற்போது காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் இடையிலான நேரடியான கேரளப் போட்டியால் புதுச்சேரி பிராந்தியமான கேரளத்தையொட்டி உள்ள மாஹேயில் கடும் பிரச்சினை உருவாகியுள்ளது.

கேரளத்தை ஒட்டியுள்ள மாஹேயில் சிபிஎம், சிபிஐ தரப்பினரிடம் விசாரித்தபோது, "மாஹேயில் தர்மசங்கடமான நிலை நிலவுகிறது. வெளிப்படையாக காங்கிரஸ் கட்சிக்கு என வாக்கு சேகரிக்க இயலாத சூழலில் உள்ளோம். அதே நேரத்தில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறோம்" என்று குறிப்பிட்டனர். இப்பகுதியில் காங்கிரஸுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம் செய்வதில் சிக்கல் நிலவுகிறது.

இச்சூழலில் மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி வேட்பாளர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் கூறுகையில், "கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். கேரளத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் களம் இறங்கியுள்ளதால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் மாஹே பிராந்தியத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான எனக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தந்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

ஆனால் இதை கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுக்கின்றன. சிபிஎம் புதுச்சேரி பிரதேச செயலர் ராஜாங்கத்திடம் கேட்டதற்கு, "மாஹே கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றி தவறாக மக்கள் நீதி மய்யத்தினர் குறிப்பிடுகின்றனர். எழுத்துப்பூர்வமாக மாஹே பிராந்தியத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவுக் கடிதம் ஏதும் தந்துள்ளார்களா என்றால் இல்லை. அப்படியிருக்க மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொய் சொல்கிறார்" என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து கேரளத்தில் ராகுல் போட்டியால் புதுச்சேரி பிராந்தியமான மாஹேயில் குழப்பம் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x