Published : 07 Apr 2019 04:24 PM
Last Updated : 07 Apr 2019 04:24 PM

எத்தனை பாலியல் வன்கொடுமை நடந்தாலும் பரவாயில்லை- பிரேமலதா பேச்சால் சர்ச்சை

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வந்தாலும் வந்தது. அரசியல்வாதிகள் அனைவரும் மக்களைத் தேடிச்சென்று பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர். அவர்கள் செய்யும் பிரச்சாரத்தைவிட, நிகழ்த்தும் நகைச்சுவையைக் காண அதிக கூட்டம் கூடுகிறது.

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, அதிமுக- பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. பிரச்சாரம் செய்ய விஜயகாந்தின் உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், அவரின் மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரச்சாரத்தின்போது, எங்களுடைய கோரிக்கைகள் சிலவற்றை பாஜக நிறைவேற்றியதால்தான், அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தோம் என்று சொன்னார் பிரேமலதா. ஆனால் இதுவரை கோரிக்கைகள் என்ன என்பது குறித்து வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் அண்மையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரப் பொதுக்கூட்டமொன்றில் பேசிய பிரேமலதா, ''கடந்த ஐந்து வருடத்தில் பாஜக ஆட்சி மிகவும் நிலையாக இருந்தது. நாடும் பாதுகாப்பாக இருந்தது. பிரதமர் மோடியால் மட்டும்தான் நிலையான ஆட்சியை உருவாக்க முடியும்.

இவர்களை நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டிற்கு நல்லது. பெண்களின், தாய்க் குலங்களின் வாழ்க்கையை நிச்சயமாகக் காக்கக் கூடிய கூட்டணி இந்த அதிமுக கூட்டணி.

நான் சொல்வது என்னவென்றால், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. இந்தக் கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் எல்லோரிடமும் கேட்பது இதுதான். இந்தக் கூட்டணி நிச்சயம் உங்களுக்கு உறுதுணையாக இருந்து எல்லா விதத்திலும் உதவும். உங்களின் பாதுகாப்பிற்கு எங்கள் கூட்டணி உறுதியளிக்கும்'' என்று பேசினார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ’’கடுமையான சட்டம் இயற்றி பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த வேண்டும். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்’’ என்று பிரேமலதா பேசினார்.

தற்போது எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை என்று அவர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x