Published : 07 Apr 2019 03:36 PM
Last Updated : 07 Apr 2019 03:36 PM

பொறியாளர் செய்த தவறால் தெர்மாகோல் ராஜூவானேன்: செல்லூர் ராஜூ உருக்கம்

பொறியாளர் செய்த தவறால் நான் உலகம் முழுவதும் தெர்மாகோல் ராஜூவானேன் என்று செல்லூர் ராஜூ உருக்கமாகத் தெரிவித்தார்.

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள ஜாகிங் கிளப்பில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ''பொறியாளர் செய்த தவறால் எனது பெயர் சமூக வலைதளங்களில் தவறாக தெர்மாகோல் ராஜூ என்று பரவியது. பொறியாளர் தெர்மாகோல்களை ஒன்றுபடுத்தாமல், டேட்களை வெட்டி ஒட்டியதால், அனைத்தும் காற்றில் பறந்துவிட்டது. அதனால் என் பெயர் உலகம் முழுவதும் பரவிவிட்டது.

கையை நீட்டியவாறு யாராவது ஆற்றில் நின்றுகொண்டு இருந்தாலே மதுரையில் கூட்டம் கூடும். கடைசியில் பார்த்தால் எருமையைக் குளிப்பாட்டுக் கொண்டிருப்பார்கள். அதற்கே கூட்டம் கூடுவது மதுரை. இது வழக்கமானது.

அதுபோலத்தான் நடிகர், நடிகைகளைப் பார்க்கவும் கூட்டம் கூடும். ஆனால் அது ஓட்டாக மாறாது. திமுக பிரமுகர்களிடமிருந்து நிறைய பணம் வெளிவரும்'' என்றார் செல்லூர் ராஜு.

முன்னதாக, தேனி மாவட்டத்தில் இருக்கும் வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தெர்மாகோல் அட்டைகளைப் போர்த்தினர். சுமார் 300 தெர்மாகோல் அட்டைகளை 'டேப்'களை வைத்து ஒட்டி அணையில் மிதக்கவிட்டனர்.

'அணை முழுவதும் தெர்மாகோல் அட்டைகளைப் போட்டு தண்ணீரை மூடுவதாவது' என்று நிபுணர்கள் தொடங்கி, சாமானிய மக்கள் வரை ஆரம்பத்திலேயே இத்திட்டத்தை விமர்சித்தனர். அதற்கேற்றவாறு, அடுத்த சில நிமிடங்களிலேயே தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் காற்றில் பறந்துபோனது. அதைக் குறிப்பிட்டு தெர்மாகோல் ராஜூ என்று அனைவரும் விமர்சிக்கத் தொடங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x