Published : 07 Apr 2019 12:47 PM
Last Updated : 07 Apr 2019 12:47 PM

அமமுகவில் இணைகிறாரா நடிகர் அஜித்?- வெற்றிவேல் விளக்கம்

தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நடிகர் அஜித் இணைகிறாரா என்ற கேள்விக்கு பெரம்பூர் வேட்பாளரும் டிடிவியின் தீவிர ஆதரவாளருமான வெற்றிவேல் விளக்கம் அளித்துள்ளார்.

பெரம்பூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றிவேல் அமமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முன்னதாக பெரம்பூர் தொகுதியில் அதிமுக எம் எல் ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெற்றிவேல். தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, பதவிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் அவரும் ஒருவர்.

இந்நிலையில் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அப்போது வெற்றிவேல் கார் ரேஸில் ஆர்வம் கொண்டிருந்ததையும் அதில் பட்டங்கள் பெற்றது குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது நடிகர் அஜித் அமமுகவில் இணைவது குறித்து வெற்றிவேல் பேசிவருகிறார் என்று தகவல்கள் வெளியாவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிவேல், ''கார் ரேஸில் நான் கலந்துகொள்ளும் போதெல்லாம் அஜித் மிகவும் ஜூனியராக இருந்தார். அவரை நன்றாகத் தெரியும். நல்ல நண்பர் அவர்.

அவர் கார் ரேஸ் கற்றுக்கொண்டிருக்கும்போது நாங்கள் சாம்பியன்ஷிப் வென்றிருக்கிறோம். நல்ல மனிதர் அவர். நான் பார்த்த வரையில் அஜித் தங்கமான மனிதர். அவரை நான் அமமுகவுக்குக் கூட்டி வருவதாகச் சொல்வதெல்லாம் பச்சைப் பொய்'' என்றார் வெற்றிவேல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x