Published : 07 Apr 2019 12:38 PM
Last Updated : 07 Apr 2019 12:38 PM

‘நீங்க நாளைக்கு வாங்க தம்பி’ பேட்டியை பாதியில் நிறுத்திய தமிழிசை: ஸ்டெர்லைட் ஆலை,  எழுவர் விடுதலை கேள்வியால் கோபம்

தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும்போது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பேட்டியை பாதியில் நிறுத்தி வெளியேறினார் தமிழிசை.

நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணிக்கு பெரும் சிக்கலை அளிக்கிறது. கஜா புயல் பாதிப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி மத்திய அரசின் பராமுகம், நீட் நுழைவுத்தேர்வு உள்ளிட்ட விவகாரங்களை பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணியில் யாரும் விரும்புவதில்லை.

அதிலும் பாமக, தேமுதிக இரு கட்சிகளும் மாநில அரசை கடுமையாக விமர்சித்துவிட்டு திடீரென அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் பிரச்சாரத்தில் எதைப்பேசுவது என தெரியாமல் திணறி வருகின்றனர்.

பாஜக நிலையும் அதேபோன்று உள்ளது. அதிலும் பாஜக தலைவர் தமிழிசை தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், நீட் உள்ளிட்ட விஷயங்களை தனது பிரச்சாரத்தில் தவிர்க்கிறார். இந்நிலையில் தமிழிசையை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது.

முதல் கேள்வியே ஸ்டெர்லைட் பற்றி கேட்க தமிழிசை ஆத்திரமடைந்தார். அது நீதிமன்றத்தில் உள்ளது என சொல்ல, நீட் கூட நீதிமன்ற விசாரணையில் உள்ளது பியூஸ் கோயல் பேசுகிறாரே என செய்தியாளர் கேட்க அடுத்த கேள்வியை கேளுங்கள் என்கிறார்.

அடுத்தக்கேள்வி ஏழுபேர் விடுதலை குறித்து கேட்டவுடன் கோபமடைந்த அவர் மைக்கை அகற்றிவிட்டு நீங்க நாளைக்கு வாங்கத்தம்பி என எழுந்து போகிறார். செய்தியாளர் கேட்டுக்கொண்டும் மறுத்துவிட்டு செல்கிறார். தற்போது இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அவரது பேட்டி:

நீட் தேர்வு விவகாரம்கூட வழக்காடு மன்றத்தில் உள்ளதே?

நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. ஆனால் பாலிசிவாரியாக அவர்கள் அதை ரிலாக்ஸ் செய்யவேண்டும் என மாநில அரசு நினைக்கிறார்கள்.

நீட் விவகாரம் பற்றி பேசும்போது ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஏன் பேசக்கூடாது?

நான் ஒட்டுமொத்தமாக தூத்துக்குடிக்காக நான் இப்போது போட்டி போடுகிறேன். ஸ்டெர்லைட் வழக்காடு மன்றத்தில் உள்ளது. நீங்கள் ஸ்டெர்லைட் விவகாரம் மட்டுமே பேசுவதாக இருந்தால் வேண்டாம், தூத்துக்குடி பற்றி மட்டும் பேசுங்கள். ஸ்டெர்லைட் வழக்காடுமன்றத்தில் உள்ளது.

தூத்துக்குடி மிகப்பெரியது எல்லோருக்கும் அக்கறை உள்ளது. ஸ்டெர்லைட் வழக்காடு மன்றத்தில் உள்ளது. நீங்கள் வேறு கேள்வி கேளுங்கள்.

எழுவர் விடுதலைக்குறித்து கூட்டணிக்கட்சிகள் ஒருமித்த கருத்து உள்ளது?

ஒரே ஒரு நிமிஷம் தம்பி நீங்கள் நாளைக்கு வருகிறீர்களா?

ஒரு நிமிடம் மேடம்?

இல்லை உண்மையிலேயே நாளைக்கு வாங்க. நாளைக்கு பார்க்கலாம். ஏனென்றால் நான் இந்தப் பேட்டியை ஏற்றுக்கொள்ளணும் அல்லவா? என தமிழிசை பேட்டியை முறித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x