Published : 07 Apr 2019 12:03 PM
Last Updated : 07 Apr 2019 12:03 PM

இது என்ன ரஃபேலா?! - பிரச்சாரக் களத்தில் செங்கொடிகளுடன் சிறிது நேரம்

'மாறாதய்யா மாறாது நிறமும் குணமும் மாறாது!’ என்கிற வார்த்தைகள் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பொருந்தும்.

தேர்தல் பிரச்சாரக் களங்களில் பணியாற்றும் உப்புமா, காப்பி கொடுத்து உபசரித்த காலமெல்லாம் மாறி பிரியாணி, ஒரு குவார்ட்டர், கையில் இருநூறு ரூபாய் பணம் என கொடுத்து ஏசி பஸ்/வேனில் தொண்டர்களை அழைத்து வரும் இக்காலத்திலும், சைக்கிளிலும், டூவீலரிலும் கொடியை கட்டிக் கொண்டு ஒரு டீ, வடை, போண்டா, பப்ஸ் வசதி கூட செய்யப்படாமல் தொண்டர்களை, ச்சே தப்பு, தப்பு தோழர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் ஒரே கட்சி அதுவாகத்தான் இருக்கிறது.

இந்த காணக் கிடைக்காத காட்சிகள் கம்யூனிஸ்ட்டுகள் போட்டி போடும் தேர்தல் களத்தில் மட்டுமே மக்களுக்கு கிடைக்கிறது. இதோ கடந்த வாரம் ஒரு மாலைப் பொழுது. 4 மணிக்கு கோவை சித்தாபுதூர் மதிமுக அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பிரச்சார அறிவிப்பு.

4.15 மணிக்கு நான் அங்கிருந்தேன். ரஃபேல் ஊழலை சிம்பாலிக்காக காட்டுகிற மாதிரியான செட்டிங்கில் ஒரு வேன். மதிமுக அலுவலகத்திற்கு ஒரு பர்லாங் தூரத்தில் நின்றிருந்தது. இந்த வேனை டிசைன் செய்தவர் கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் பொறுப்பாளர் சி.பத்மனாபன்.

‘‘மோடியின் ஐந்தாண்டு கால அவலத்தை விளக்கும் விதமாக நான்கைந்து டிசைன்களைப் பார்த்தோம். இதுதான் சரியாக இருந்தது. உருவாக்கினோம். இது ஒரு விமான மாதிரின்னுதான் பொதுவாத் தெரியும். அதைப் பார்த்துட்டு ஜனங்களே ‘இது என்ன ரஃபேலா?’ன்னு வந்து கேட்கிறாங்க!’’என குறிப்பிட்டார் அவர்.

அந்த வேனின் பின்னே சில ஆட்டோக்கள். ஒரு டீக்கடை. அக்கடை ஓரம் சில சிவப்புச் சட்டை, சிவப்புக் கொடி பிடித்த தோழர்கள். மாதர் சங்கத்தினர் சிலர் டூவீலர்களில். கேமரா சகிதம் நம்மைப் பார்த்தவர்கள், ‘இதோ, இப்ப வேட்பாளர் வந்து விடுவார்!’ என்கின்றனர்.

‘‘இந்த மாலைப் பிரச்சாரத்தை யார் தொடங்கி வைக்கிறார்கள்?’’ என்ற கேள்விக்கு, ‘‘நீங்களே கூட உங்க பத்திரிகை சார்பா தொடங்கி வைக்கலாம்!’’ இப்படி சொல்லி அதிர வைத்தார் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி யு.கே.சிவஞானம்.

‘‘இது தமாஷ் இல்லை தோழர். ஒரு இடத்தில் பிரச்சாரம் எங்கே தொடங்குகிறதோ, அங்கே ஏதாவது பிரமுகர் தென்பட்டால் அவர்களை வைத்தே பிரச்சாரத்தையும் ஆரம்பித்து விடுவோம்!’’என்றும் குறிப்பிட்டவர், ‘‘இந்த இடத்தைப் பொறுத்தவரை இப்பகுதி திமுக செயலாளர், திமுக வார்டு செயலாளர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கின்றனர்!’ என்று சொல்லி என் அதிர்ச்சியை போக்கினார்.

திமுக பகுதி செயலாளர், வார்டு செயலாளர்களும் சால்வை சகிதம் வந்து  நிற்கின்றனர். நேரம் ஆக, ஆக டூவீலர்கள், கொடிகளின் எண்ணிக்கை கூடுகிறது. சிலர் கொடியுடன், வாகனத்துடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். ரஃபேல் மாடல் வேன் டீக்கடை அருகே வருகிறது.

‘‘அமைதியின் வேட்பாளர். கோவை நகரம் அமைதி பூண வேண்டுமானால் நீங்கள் ஆதரிக்க வேண்டிய வேட்பாளர். ஜி.எஸ்.டி., ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு ஆகியவற்றால் துவண்டு போயிருக்கும் தொழில்கள் திரும்ப புத்துயிர் பெற்று செழிக்க வேண்டுமென்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய வேட்பாளர் பி.ஆர்.நடராஜன். இதோ உங்களிடம் வாக்கு கேட்க வருகிறார்!’’

தொடர்ந்து வேனிலிருந்து ஒலிக்கும் ரெக்கார்டட் வாய்ஸ் பிரச்சாரம். சரியாக நான்கரை மணிக்கு ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து வேட்பாளர் இறங்குகிறார். கூடவே இரண்டொரு தோழர்கள் இறங்குகின்றனர். திமுக பிரமுகர்கள் மட்டுமல்ல, மற்ற கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், கொமதேக என சிலர் சேருகின்றனர். சால்வை அணிவிக்கின்றனர்.

அங்கேயே தொண்டர் ஒருவர் தன் மனைவியுடன் (அவர்களின் பஞ்சரட்டை தோற்றமே ஏழை எளியவர்கள் என காட்டுகிறது) வேட்பாளரை எதிர்கொள்கிறார். ‘‘சாமி நீங்கதான் எனக்கு வழி சொல்லோணும்...!’ அங்கே பரபரப்பு கூடுகிறது. அந்தப் பெண்மணியும், ஆணும் கண்ணீருடன் சொல்லுவதைக் கேட்கிறார்.

‘‘நீ வீட்டுக்குப் போ. நான் பார்த்துக்கறேன். எங்க ஆளுகளை விட்டு அவனை பேசிக்கிறேன்!’’என்கிறார். அவர்கள் காலில் விழுந்து கும்பிடுகின்றனர். அதைத் தடுக்கிறார். வீட்டுப் பிரச்சினை. வீட்டை விட்டு குறிப்பிட்ட சிலர் வெளியேற்றி விட்டார்கள். அதைப் பற்றி அவரிடம் முறையிட்டிருப்பதை அவர்களிடம் பின்னர் பேசியதில் அறிய முடிந்தது.

கூட்டணிக் கட்சியினருடன் வேனில் ஏறுகிறார் வேட்பாளர். பிரச்சாரம் ஆரம்பிக்கிறது. வாகனங்கள் புறப்படுகிறது. எல்லாவற்றுக்கும் முன்னே ஒரு வேன். அதில் ஜமாப் இசை முழங்க, ‘போடுங்கம்மா ஓட்டு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்தைப் பார்த்து!’’ கோஷங்கள்.

அதற்குப் பின்னே ஐம்பது அறுபது டூவீலர்கள். பின்னே இருபது முப்பது டூவீலர்கள். நான்கைந்து ஆட்டோக்கள். ஒரு சில கார்கள். டூவீலர்களில் எல்லாம் செங்கொடிகள். சுத்தி அரிவாள் சின்னங்கள். இதைப் பற்றி ‘‘கொடி கட்டக்கூடாதுன்னு தேர்தல் அதிகாரிகள் சொன்னாங்க. அப்படித்தான் கட்டுவோம்னு சொன்னோம். அப்ப கேஸ் எழுதுவோம்னாங்க. எழுதிக் கோங்கன்னுட்டோம்!’’என்று நம் வண்டியிலேயே பின்னால் ஏறிக் கொண்ட தோழர் ஒருவர்.

சில இடங்களில் மக்களே சர்பத், சில பகுதிகளில் ஜூஸ், காபி, டீ கொடுக்கிறார்கள். வேட்பாளருடன் பிரச்சாரத்திற்கு வந்திருக்கும் தோழர்களும் வாங்கி அருந்துகிறார்கள்.

அந்த சமயம் தோழர் ஒருவர் நம்மை என்ன பத்திரிகை என கேட்டு விட்டு, பிரச்சாரத்தில் பங்குபெற்றுள்ள தோழர்கள் குறித்தெல்லாம் விவரிக்கிறார். அதில் வேட்பாளர் பி.ஆர். நடராஜனின் மனைவியும், மகளும் பிரச்சாரத்தில் இருப்பதாக போகிற போக்கில் சொல்லிச் சென்றார்.  வேட்பாளர் பிரச்சார வேனுக்குப் பின்னே ஒரு ஆட்டோவில் சுத்தி அரிவாள் நட்சத்திர பதாகை ஒன்றை வைத்தபடி மாதர் சங்கப் பெண்களுடன் பெண்களாக வேட்பாளரின் மனைவி. அவர் பெயர் வனஜா. இனம் கண்டு பேசுகிறேன்.  ‘தோழர்க அத்தனை பேரும் ஓட்டுக் கேட்டு போறாங்க. அதுல நானும் ஒருத்தி. இதுல என்ன அதிசயம் இருக்கு?’’ என்கிறார் சாதாரணமாக. 

இவர் இங்கே, மகள் எங்கே? பிரச்சார வேனுக்கு முன்னே, தோழர்கள் டூவீலரில் டபுள்ஸில் பாய்ந்து, பாய்ந்து ஏறும் பெண். ஆங்காங்கே நின்று பிரச்சாரத்தை புகைப்படங்கள், வீடியோ எடுக்கிறார். மறுபடி தோழர்கள் டூவீலரில்களிலேயே ஏறுகிறார். அவர் பெயர் ஆர்த்தி. இன்ஜினீயரிங் படித்தவர். ‘‘அப்பா கூட தினமும் வந்துடுவேன். பிரச்சாரத்திற்கு கூட மாட உதவி செய்யறேன். இதுல என்ன அதிசயம் இருக்கு?’’ என்று அம்மாவைப் போலவே கேட்கிறார். பேட்டி என்றதும், ‘‘அப்பாவைக் கேட்டு விட்டு கொடுக்கிறேனே!’’ என்றபடி வேறொரு டூவீலரில் பாய்ந்து ஏறிக் கொள்கிறார்.

ரொம்ப பிஸியாக பிரச்சாரத்தில் இருந்த வேட்பாளர் அப்பாவிடம் இடையில் பேசி விட்டு நம் லைனில் வந்தார். ‘‘தினக்கூலியை கூட தியாகம் பண்ணிட்டு ஆயிரக்கணக்கான தோழர்கள் அன்றாடம் இந்தப் பிரச்சாரத்தில் அரும்பாடு பட்டுட்டு இருக்காங்க. அவங்களைப் பத்தி எழுதுங்க. இதுல என் பேரை, அம்மா பேரை முதன்மைப்படுத்தி எந்த ஒரு வாசகத்தையும் வெளியிடாதீங்க. ப்ளீஸ். அதுதான் எங்க அப்பாவோட, வேட்பாளரோட வேண்டுகோளும்!’’ என  கூலாக சொல்லி விடை கொடுத்தார். இதுதான் கம்யூனிஸமோ?!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x