Published : 05 Apr 2019 06:01 PM
Last Updated : 05 Apr 2019 06:01 PM

ரூ.9 கோடி ஸ்காலர்ஷிப் வாங்கி யு.கே.வில் படிக்கலாம் எப்படி?- பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் விளக்கம்

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு யு.கே.சிறந்த இடமாகத் திகழ்கிறது. இந்திய மாணவர்கள் ஸ்காலர்ஷிப் உதவியுடன் அங்கே படிக்கமுடியும் என்கிறது இந்திய பிரிட்டிஷ் கவுன்சில்.

இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்திய இயக்குநர் ஜனக புஷ்பநாதனிடம் 'இந்து தமிழ்' சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம்.

என்ன வகையான கல்வித் திட்டங்களை யு.கே. வழங்குகிறது? மருத்துவம், கலை, பொறியியல் மற்றும் கேட்டரிங் (உணவு தயாரிப்பு) தொடர்பாக படிக்க முடியுமா?

கவின் கலைகளில் தொடங்கி மருத்துவம், பொறியியலில் தொடங்கி தனித்துவமான துறைகள் வரை எண்ணற்ற கல்வித்திட்டங்களை யுகே வழங்குகிறது. யு.கே-வில் சர்வதேச மாணவர்களுக்கு பிரபலமான கல்வித் திட்டங்களாக, பிசினஸ் மற்றும் நிர்வாக படிப்பு, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல், மருத்துவம் தொடர்பான கல்வித்திட்டங்கள், படைப்பூக்க கலைகள் மற்றும் வடிவமைப்பு, உயிரி அறிவியல், சட்டம் மற்றும் கணினி அறிவியல் ஆகியவை இருக்கின்றன.

எந்த கல்வித் திட்டங்களுக்கு ஸ்காலர்ஷிப்கள் (கல்வி உதவித்தொகை) வழங்கப்படுகின்றன? பெண்களுக்கு ஏதாவது சிறப்புச் சலுகைகள் தரப்படுகிறதா?

ஆம். ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழகங்கள், பிரிட்டன் அரசு மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றில் இருந்து இந்திய மாணவர்களுக்கு 800-க்கும் அதிகமான ஸ்காலர்ஷிப்கள் வழங்கப்படுகின்றன.

பெண்களுக்குத் தனியாக ஸ்காலர்ஷிப் உண்டு. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய பிரிவுகளில் 2018-ம் ஆண்டில் 104 பெண்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஸ்காலர்ஷிப் அளித்தோம் . தற்போது அவர்கள் பிரிட்டனில் தங்களின் முதுகலை பட்டப்படிப்பைப் படித்து வருகின்றனர். இந்தியாவில் பிரிட்டிஷ் கவுன்சில் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்காக STEM பிரிவுகளில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு இரண்டாவது முறையாக ஸ்காலர்ஷிப்பை அறிவித்துள்ளோம். இதன் மதிப்பு சுமார் ரூ.9.06 கோடி ஆகும்.

இதுதவிர கூடுதலாக சில ஸ்காலர்ஷிப்களும் உள்ளன.

• கிரேட் எஜுகேஷன் ஸ்காலர்ஷிப், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களுக்கு ரூ.9.06 கோடிக்கும் அதிகமான முழு கல்விக் கட்டண ஸ்காலர்ஷிப்புகள்.

• மாணவர்கள் பிரிட்டனில் படித்த பிறகு, தங்களின் தாய்நாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்பவர்களுக்கு காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் மற்றும் ஃபெல்லோஷிப் (CSFP).

• வார்டிக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி கற்பித்தலில் (ELT) முதுகலை பட்டப்படிப்பைக் கற்பதற்காக  ஆங்கில மொழி ஆசிரியர்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் தி. ஏ. எஸ். ஹார்ன்பை எஜுகேஷனல் டிரஸ்ட் ஸ்காலர்ஷிப்கள்.

• இந்தியத் தொழில்முறை நிபுணர்கள் / பணியாளர்கள் கலை மற்றும் கல்வி சார்ந்த குறிக்கோள்களை எட்டுவதற்கு சார்ல்ஸ் வாலஸ் இந்தியா டிரஸ்ட் ஸ்காலர்ஷிப்கள்.

• நியுட்டன் பாபா ஃபண்ட் முனைவர் கல்வி திட்டம் - இளம் இந்திய மற்றும் யுகே மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வில் 2 – 4 மாதங்கள் செலவிட உதவும் ஸ்காலர்ஷிப்.

செவனிங் ஸ்காலர்ஷிப்கள்: செவனிங் என்பது, பிரிட்டனில் கல்வி பயில அளிக்கப்படும் உலகளாவிய ஸ்காலர்ஷிப் செயல்திட்டமாகும். இதற்கு வெளிநாட்டு விவகார மற்றும் காமன்வெல்த் அலுவலகமும் மற்றும் பிற கூட்டுவகிப்பு நிறுவனங்களும் நிதியுதவி செய்கின்றன. எந்தவொரு யுகே பல்கலைக்கழகத்திலும், எந்தவொரு பாடத்திட்டத்திலும் ஓராண்டு முதுகலை பட்டப்படிப்பை மேற்கொள்ள இந்த ஸ்காலர்ஷிப் உதவுகிறது.

வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் உண்டா? கேம்பஸ் இண்டர்வியூவில் எத்தனை சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கிறது?

சர்வதேச அளவில் வேலை கிடைப்பதற்கு யு.கே. கல்வி உதவுகிறது. அத்துடன் யு.கே.விலும் இந்தியாவிலும் உள்ள முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு வேலைவாய்ப்புக்கு உதவுகிறது.

படித்துமுடித்து விட்டு, யு.கே.விலேயே வேலை தேடும் வகையில் வெளிநாட்டு மாணவர்கள் ஓராண்டு வரை தங்களின் விசாவை நீட்டித்துக் கொள்ளலாம். அதாவது யுஜி மற்றும் பிஜி-க்கு 6 மாதங்கள் மற்றும் பிஎச்டி மாணவர்களுக்கு ஓராண்டு வரை விசா நீட்டிப்பு வழங்கப்படும்.

மாணவர்கள் எங்கே, எப்படி விசா பெறலாம்?

ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். பொதுவாகவே, பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள், மாணவர்களின் பட்டியலைத் தயாரித்து, Tier 4 (பொது) மாணவர்கள் விசாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த தகவலை அளிக்கின்றன.

இந்தியாவில் 18 விசா விண்ணப்ப மையங்கள் உள்ளன. இது, உலக அளவில் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாகும். இந்தியாவிலிருந்து ஒரு மாணவர் விசாவிற்காக விண்ணப்பிக்கும் 94% பேரில் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இதுவும் உலக சராசரிக்கு மேற்பட்டதாகும்.

விசா பெறுவதற்கு முன் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள்

• பாஸ்போர்ட் விவரங்கள் மற்றும் விண்ணப்பதாரரின் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு நிழற்படம்.

• உங்களுக்குப் பாடநெறி (Course) வழங்கக்கூடியவரிடமிருந்து படிப்பிற்கு ஏற்றுக் கொள்ள உறுதிவழங்குதல் (CAS-Confirmation of Acceptance for Studies) படிவ ஆதாரச்சான்றுடன் ஒரு உரிமம் பெற்ற அடுக்குநிலை 4 (Tier 4) ஸ்பான்சரால் வழங்கப்படும் ஒரு பாடநெறிக்கான ஆஃபர் கடிதம்.

• ஆங்கில மொழித்திறன்கள் குறித்த ஆதாரம் – யுகேவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குள் விண்ணப்பம் செய்வதற்கு ஆங்கில தேர்ச்சி தேர்வுகளில் தேர்வுபெற வேண்டியது மிகவும் முக்கியமாகும். இந்திய மாணவர்கள் யு.கே. பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிப்பதற்கு IELTS-ல் தேர்ச்சி பெற வேண்டும்.

• யு.கே.வில் நீங்கள் தங்கியிருக்கும் காலம் முழுவதும் செலவை எதிர்கொள்வதற்கு உங்களுக்குள்ள நிதி ஆதரவு குறித்த ஆதாரச்சான்று.

உயர்கல்வி குறித்துத் தெரிந்துகொள்ள பிரத்யேக இணையதளம் உள்ளதா?

கல்வி உதவித்தொகைகள், பாடத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களை விரல்நுனியில் பெறலாம். இதற்கு https://www.britishcouncil.in/programmes/higher-education என்ற வலைதள முகவரியை க்ளிக் செய்யுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x