Published : 04 Apr 2019 11:07 AM
Last Updated : 04 Apr 2019 11:07 AM

பாஜகவினர் தலைகீழாக நின்றாலும், ரோட்டில் உருண்டு புரண்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது: ஸ்டாலின் விமர்சனம்

தலைகீழாக நின்றாலும், ரோட்டில் உருண்டு புரண்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் விவரம்:

"அதிமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி அல்ல, கொள்ளைக்கார கூட்டணி. தேர்தலுக்கு முன்னால் சேர்ந்தவர்கள், தேர்தலுக்குப் பின்னால் பிரிவார்கள். ஏனென்றால், கொள்ளைக் கூட்டத்தில் எப்பொழுதும் அப்படித்தான் நடக்கும். அதுதான் விரைவில் அந்த அணிக்கும் நடக்கப்போகின்றது.

துரைமுருகன் இல்லத்திற்குச் சென்று தேர்தல் ஆணையம் ரெய்டு நடத்தியது எப்படி? மோடியின் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கின்றது, போய் பறிமுதல் செய்ய முடியுமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், தேனியில் வேட்பாளராக நிற்கக்கூடிய தன்னுடைய மகனுக்காக ஆயிரம் இரண்டாயிரம் என்று வினியோகித்து கொண்டிருக்கின்றார்கள். ஆதாரமாக புகைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அங்கே ஏன் செல்லவில்லை?

தமிழ்நாட்டில் பாஜக சார்பில் நிற்கக்கூடியவர்கள் தோற்பது மட்டுமல்ல டெபாசிட் இழக்க போகின்றார்கள் என்ற செய்தி உளவுத் துறையின் மூலமாக மோடிக்கு சென்றடைந்து விட்டது. ஏதேனும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் நிலையில் தான் ஈடுபட்டிருக்கின்றனர். உறுதியாக சொல்கிறேன், நீங்கள் தலைகீழாக நின்றாலும், ரோட்டில் உருண்டு புரண்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது - மலராது - மலராது.

வறுமையில் உள்ளவர்களுக்கு செயல்படுவது என்னுடைய பிரதான நோக்கம் என்று சொன்னாரா, இல்லையா? ஆனால், இன்றைக்கு கார்ப்பரேட்டுகளுக்கான காரியங்களை இன்றைக்கு ஆற்றிக்கொண்டிருக்கக்கூடிய நிலையைத்தானே மோடியின் மூலமாகப் பார்க்கின்றோம். மோடி கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நான் இன்றைக்கு பட்டியல் போட்டுக்கொண்டிருந்தால் விடிந்து விடும். ஆனால், மோடி ஆட்சியில் நாடு விடியவில்லை.

நாடாளுமன்றத்திற்கு வராத, உச்ச நீதிமன்றத்தை மதிக்காத, ரிசர்வ் வங்கியை உதாசீனப்படுத்திய, சிபிஐ அதிகாரிகளை பந்தாடி இருக்கக்கூடிய, மாநில அரசுகளை எல்லாம் மதிக்காத, மாநில முதல்வர்கள் எல்லோரையும் கிள்ளுக்கீரையாக நினைத்து கொண்டிருக்கக்கூடிய, சொந்தக்கட்சியில் கூட யோசனைகள் கேட்க முடியாத நிலையில், நரேந்திர மோடியின் கையில் இன்றைக்கு இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கின்றது.

இது ஒரு பெரிய ஜனநாயக சாபக்கேடு. நரேந்திர மோடி என்றால் தனிப்பட்ட மோடியை குறிப்பிடுவது அல்ல, அவர் ஏற்றுக்கொண்ட தத்துவம் நமக்கு எதிரி, அந்த மோடியோடு சேர்ந்து இருக்கக்கூடிய அனைவரும் நமக்கு எதிரிகள் தான். இந்தியாவை வளர்த்து விட்டார் மோடி என்று கொக்கரிக்கிறார்கள். இவரிடம் தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள்.

இப்படி ஒரு பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். இது மிக மிக மோசமான ஒரு பொய். எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் போல் நினைத்துக் கொண்டு திறந்த வேனில் செல்கின்றார்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x