Last Updated : 03 Apr, 2019 10:50 AM

 

Published : 03 Apr 2019 10:50 AM
Last Updated : 03 Apr 2019 10:50 AM

என்னை பாஜகவின் பி டீம் என்று சொல்பவர்கள் பிரதமர் தேர்வின்போது குதிரை பேரத்தில் ஈடுபடுவார்கள்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து

என்னை பாஜகவின் 'பி' டீம் என்று சொல்பவர்கள் பிரதமர் தேர்வில் இழுபறி ஏற்பட்டால்  குதிரை பேரத்தில் ஈடுபடுவார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, 'இந்து தமிழ்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடாமல் திடீரென்று தவிர்த்தது ஏன்?

போட்டியிடுவதில்லை என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்துவிட்டேன். என்னுடைய வியூகங்களை வெளியே சொல்லக் கூடாது என்ற முடிவில் இருந்தேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்பது பிற கட்சிகளுக்கு தெரியக்கூடாது என்பதால் சொல்லவில்லை.

அரசியலுக்கு வராமலேயே தப்பித்து வரும் ரஜினியை புத்திசாலி என்று சொல்லலாமா?

அவர் புத்திசாலிதான். அவருடைய வாழ்க்கை, வெற்றி அதெல்லாம் அதற்கு முன்னுதாரணம். நேர்மையால் எனக்கு துணிச்சல் வந்துள்ளது. துணிச்சலுக்காக என்னை தனியாக பாராட்டாதீர்கள். எங்கள் கட்சியில் உள்ள நேர்மையை மக்கள் போற்ற வேண்டும்.

ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்கும் திட்டம் உள்ளதா?

கட்சி அலுவலகத்துக்கு வந்தவரிடம் கேட்க வேண்டியதை நேரில் கேட்டுவிட்டேன். கண்டிப்பாகச் செய்கிறேன் என்று கூறியுள்ளார். ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

உங்களை பாஜகவின் 'பி’ டீம் என்கிறார்களே?

என்னை ‘பி' டீம் என்று சொல்லும் இதே கூட்டம், டெல்லியில் எந்தப் பிரதமர் பக்கம் தராசு சரிகிறதோ அந்தப் பக்கம் குதிரை விற்க போகிறார்களா, இல்லையா என்று பாருங்கள். பிரதமர் பதவிக்கு இழுபறி என்ற நிலை ஏற்பட்டால் குதிரை பேரத்தில் ஈடுபடுவர்.

சென்னை அண்ணா பாலத்தின் அருகில் குதிரை பிடித்துக் கொண்டு ஒரு சிலை உள்ளது. அதுதான் திமுக. சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்துவிட்டனர் எனது இடதுசாரி சகாக்கள்.

தான் ஒரு இந்து விரோதி அல்ல என்று திராவிட வழி வந்த மு.க.ஸ்டாலினே சொல்லும்போது கடவுள் மறுப்பு கொள்கையை முன்னெடுத்து செல்லும் உங்களுக்கு மக்கள் ஓட்டு போடுவார்களா?

என் படம் பார்க்க வந்தவர்கள் அதை நினைத்துவரவில்லை. படத்தில் என்ன செய்வேன் என்று நினைத்துதான் வந்தார்கள். விருந்தோம்பல் செய்ய வந்துள்ளதால் அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் கொடுக்க முடியும். 60 வருடமாக என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரியாருக்கு நிகராக சினிமாவில் பேச விட்டார்கள். அவருக்கு மட்டுமே கொடுத்த சுதந்திரத்தை ஒரு நடிகனுக்கு சினிமாவில் கொடுத்தார்கள். அதனால், நான் என்றைக்கும் நன்றிக் கடன் படுவேன்.

நீங்கள் நினைத்ததைப்போல் நடைமுறையில் அரசியல் களம் உள்ளதா?அரசியல் இப்படி இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் வந்தவன் நான். ஒரு கட்சி நல்லது செய்தாலும் அதை இன்னொரு கட்சி தவிடுபொடியாக்கும் செயல்தான் நடந்து வருகிறது. எந்த நல்ல திட்டத்தையும் தொடர முடியாத கலாச்சாரம் மாற வேண்டும்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியாது என்று சாருஹாசன் கூறியுள்ளாரே?

நான் படித்து பெரிய ஆளாக வருவேன் என்றார். அந்த கணிப்பு தவறாகிவிட்டது.  சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆர் இருக்கும்போது நான் பெரிய நடிகனாக வரமுடியாது என்றார்.  அந்தக் கணிப்பும் தவறாகிவிட்டது. அதேபோல் இப்போது அவர் கூறும் கணிப்பும் தவறாகவே இருக்கும்.

மம்தா, அரவிந்த் கேஜ்ரிவாலுடனான சந்திப்பு தேசிய அரசியலை நோக்கிய முன்னெடுப்பா?

தமிழகம் தேசிய அரசியலை நோக்கிச் சென்ற போதெல்லாம் செழித்துள்ளது. காமராஜர் ஆட்சி என்று சொல்கிறோம் அல்லவா, அந்த ஆட்சியின் பக்கபலம் எங்கிருந்து வந்தது. வாய்ப்பு இருந்தால் தகுதி இருந்தால் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை நோக்கி நகர்வோம்.

பாஜகவை எதிர்த்துவிட்டு காங்கிரசுடன் மட்டும் நட்பு பாராட்டுவதற்கு காரணம் என்ன?

ஒரு காலத்தில் நல்ல கட்சியாக இருந்தவர்களை ரொம்ப திட்டக் கூடாது என்றுதான் இருக்கிறேன். இப்போது ரஃபேல் ஊழலுக்காக குற்றம்சாட்டுபவர்கள் பீரங்கி ஊழலை செய்தவர்கள்தானே. யார் செய்தாலும் தவறு தவறுதான்.

மக்கள் நீதி மய்யம் எக்காலத்திலும் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்காதா?

கண்டிப்பாக. திமுக, அதிமுக திருந்துவார்கள் என்ற நம்பிக்கையே போய்விட்டது. திமுக, அதிமுக எல்லாம் இனி இல்லை. அவர்கள் சொல்லலாம், நாங்கள் இன்னும் 100 வருடம் இருப்போம் என்று. இன்னும் 100 வருடம் அவர்கள் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் முயற்சி. மூட்டை மூட்டையாக பணம் இருக்கும் இந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டோமே  என்று இப்போது கம்யூனிஸ்ட்கள் தலைகுனிந்து இருப்பார்கள். நவ கம்யூனிஸ்ட்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியாது.

ரசிகர்களின் முழு வாக்கும் உங்களை வந்து சேரும் என்று நம்புகிறீர்களா?

வர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். ஆனால், இந்தத் தேர்தல் முடிந்ததும் கண்டிப்பாக பிற கட்சிகளில் இருந்து இடம் பெயர்வார்கள். அதற்கு முன்கூட்டியே செய்திகள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

நோட்டோவுக்கு வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே..?

அந்தப் பக்கம் துரைமுருகன் நோட்டாக போட்டுக் கொண்டிருக்கிறார். மக்களும் நோட்டா போட்டால் தமிழகம் என்ன ஆவது? அதை செய்யாதீர்கள். நோட்டாவை குறைக்க வேண்டும். நோட்டாவின் மூலம் படித்தவர்களை வடிகட்டி ஒதுக்கும் சூழ்ச்சியை அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். அதற்கு நாம் வழிவிடக் கூடாது.

கட்சியின் முக்கிய பொறுப்புகளில் சினிமாவை சுற்றியிருந்தவர்களை தவிர கட்சிக்கு அப்பாற்றப்பட்ட நல்லவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா?

மு.க.ஸ்டாலின் மகன், வாகை சந்திரசேகர் நடிகர்கள்தான். கெட்ட வார்த்தை பேசினார் என்று ஒதுக்கி வைத்தார்களே ராதாரவி அவரும் நடிகர்தான்.  நெடுஞ்செழியனும், மதியழகனும், நாஞ்சில் மனோகரனும் ஈ.வி.கே.சம்பத்தும் இருந்த கட்சியில் வெளியில் இருந்து நல்ல அரசியல்வாதி கிடைக்கவில்லையா. ஏன் தோன்றுவதில்லை என அவர்களைப் பார்த்து கேட்கிறேன்.

டார்ச் லைட் சின்னம் கிடைத்தது குறித்து?

நாங்கள் விசில் சின்னம் கேட்டோம். கிடைக்காது என்றபோது மனச் சோர்வுகூட ஏற்பட்டது. ஆனால், டார்ச் லைட் தமிழக சரித்திரத்தில் இடம் பெறும் சின்னமாக மாறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x