Published : 01 Apr 2019 04:09 PM
Last Updated : 01 Apr 2019 04:09 PM

5 ஆண்டு எம்.பி.யாக இருந்து என்ன செய்தீர்கள்? எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடினீர்களே: அன்புமணியைக் கேள்வி கேட்ட தொண்டருக்கு செம்மலை பளார்

எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடினீர்களே, 5 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்தபோது தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என தொண்டர் ஒருவர் பிரச்சாரத்தில் அன்புமணியிடம் கேள்வி கேட்டார். அவரை செம்மலை கன்னத்தில் அறையும் காட்சி வைரலாகி வருகிறது.

தமிழக மக்களுக்கு எதிரான கூடங்குளம் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டபோது அதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அதேபோன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. அதேபோன்று எட்டுவழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டு விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்டன. அதை எதிர்த்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள், விவசாயிகள் போராடினர்.

எதிர்க்கட்சிகளில் குறிப்பாக பாமக கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. அன்புமணி ராமதாஸை சேலத்தில் அவரது தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள் நுழையவே அரசு தடை போட்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் அன்புமணி. எட்டுவழிச்சாலையை எதிர்த்துப் பேசிய, போராடிய பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இறுதியில் உயர் நீதிமன்றம் தலையீட்டின்பேரில் அம்மக்களின் நிலம் கையகப்படுத்துவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்த பாமக, தேமுதிக திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்தது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இரண்டு கட்சிகளுக்குமே அது பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தருமபுரி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென தொண்டர் ஒருவர், ''ஐயா 5 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்தீர்களே. தொகுதிக்கு என்ன செய்தீர்கள், அதிமுக தொண்டன் கேட்கிறேன். எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்தீர்களே'' எனக் கேட்டார்.

அதைப் பார்த்து ஒரு அதிமுக தொண்டர் சிரித்தார். அன்புமணி கண்டுகொள்ளாமல் பேச, அருகில் இருந்த செம்மலை எம்.எல்.ஏ அத்தொண்டரை மாறி மாறி கன்னத்தில் அடித்தார். பின்னர் அந்த அதிமுக தொண்டரை போலீஸார் வந்து இழுத்துச் சென்றனர். கடைசி வரை ஐயா எட்டுவழிச்சாலையை எதிர்த்தீர்களே என கத்தியபடி சென்றார் அந்தத் தொண்டர்.

இறுதியில் மயக்கமடைந்து கிடக்கும் அவரை அதிமுக தொண்டர் என்று அங்குள்ளவர்கள் கூறி அடையாள அட்டையைக் காட்டினர்.

அதிமுக தொண்டரைப் பொதுவெளியில் கன்னத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ அறைந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x