Published : 29 Mar 2019 04:27 PM
Last Updated : 29 Mar 2019 04:27 PM

சென்னை மாநகராட்சி கான்ட்ராக்டர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு: ரூ.16.4 கோடி ரொக்கப் பணம் பறிமுதல்

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் சென்னை மாநகராட்சி கான்ட்ராக்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் ரூ.16.4 கோடி ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர்.

சென்னை மாநகராட்சி மற்றும் முனிசிபாலிட்டிகளில் எல்.இ.டி விளக்குகள் அமைக்கும் கான்ட்ராக்டராக இருப்பவர் சபேசன். செல்வாக்கு மிக்க இவர் பெரிய அளவிலான ஒப்பந்ததாரர் என்று கூறப்படுகிறது. இவரது சொந்த ஊர் பெங்களூரு. சபேசன் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் உள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் வருமான வரித்துறையினர் நேற்று மாலை இவரது திருவான்மியூர் வீடு, தி.நகர் அலுவலகம் மற்றும் கீழ்கட்டளையில் உள்ள ஒரு இடம் என மூன்று இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

சபேசனுடைய நண்பர் சரவணன் என்பவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். ரெய்டு நடப்பதை அடுத்து சபேசன் உடல் நிலையைக் காரணம் காட்டி மருத்துவமனையில் படுத்துக்கொண்டார்.

அவருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை. அவருடைய நண்பர் சரவணனிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் ரூ.16 கோடியே 40 லட்சம் இருந்தது தெரியவந்தது.

சபேசன் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் தேர்தல் நேரத்தில் வேறு நோக்கத்திற்காக அவரிடம் இவ்வளவு பணம் இருந்ததா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x