Published : 29 Mar 2019 02:17 PM
Last Updated : 29 Mar 2019 02:17 PM

ஆரத்திக்குப் பணம்; கனிமொழியின் பழைய வீடியோவை வைத்து அதிமுக புகார்:  அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

சில மாதங்களுக்கு முன் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பணம் கொடுக்கும் வீடியோவை தற்போதைய வீடியோ என அதிமுக புகார் அளிக்க, அதன்மீது தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தலைமைச் செயலகத்திலுள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக சார்பில் அதன் தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை புகார் ஒன்றை அளித்தார். அதில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுக்கும் பெண்களுக்குப் பணத்தை வாரி இறைக்கும் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தார்.

அவர்களது புகாரில், ''திமுகவின் தூத்துக்குடி வேட்பாளரான கனிமொழியும் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன்னும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்களை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது குற்றமாகும். இது விதிமுறைகளுக்கு எதிரானது. தேர்தல் நடத்தை விதிகளை மீறிச் செயல்பட்ட கனிமொழியின் நாடாளுமன்ற வேட்புமனுவை நிராகரிக்க அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். அவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு தண்டனை வழங்க வேண்டும்'' என கோரப்பட்டிருந்தது.

புகார் அளித்த பின்னர் வெளியே வந்த இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் காட்டிய வீடியோ ஆதாரத்தைப் பார்த்த செய்தியாளர்கள் இது ''பழைய வீடியோ'' என தெரிவித்தனர். ''இல்லை. இது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பணம் வழங்குபோது எடுத்த வீடியோ'' என இன்பதுரை தெரிவிக்க, ''இல்லை இது கிராமசபை கூட்டத்துக்குச் செல்லும்போது கனிமொழிக்கு ஆரத்தி எடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ. இதை நாங்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பார்த்துவிட்டோம்'' என செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த இன்பதுரை, ''அப்படியா'' என கேட்டுவிட்டு, ''புகார் அளித்த செய்தியையாவது போடுங்கள்'' என சொல்லிவிட்டுச் சென்றார். தேர்தலை ஒட்டி சமூக வலைதளங்களில் உண்மையான செய்திகளைவிட போலியான செய்திகள்தான் அதிகம் உலா வருகின்றன. அதை ஒரு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பரிசோதிக்காமல் புகார் அளிக்கலாமா? என்று விமர்சிக்கப்பட்டது.

ஆனால் அதைவிட ஒருபடி மேலே சென்று தேர்தல் ஆணையமே அதுகுறித்து எதையும் விசாரிக்காமல் அதிமுக புகாரின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உள்ளிட்ட 7 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி தரப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தவறான பழைய வீடியோவை அதன் உண்மைத்தன்மையை சோதிக்காமல் அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தேர்தல் ஆணையமும் விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது எப்படி சரியாக இருக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலில் ''எப்.ஐ.ஆர் போட்டுவிடுவோம், பின்னர் விசாரணையில் அவர்கள் தரப்பு நியாயத்தை தெரிவிக்கலாம்'' என்று கூறியதாகத் தெரிகிறது.

இதை முன்னுதாரணமாக வைத்து இதுபோன்ற பல வீடியோக்களைக் கொண்டு மற்றவர்களும் புகார் அளிக்க வாய்ப்புள்ளது என்கிற நடைமுறை உண்மையைப் புரிந்துகொள்ளாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x