Published : 29 Mar 2019 12:17 PM
Last Updated : 29 Mar 2019 12:17 PM

சென்னையில் ஆளுநரின் வாகனத்தை முந்திச் சென்ற சொகுசுக் கார்: அபராதம் விதித்த போலீஸார்

சென்னையில் ஆளுநர் சென்ற வாகனத்தை தொழிலதிபரின் சொகுசுக் கார் முந்திச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொழிலதிபர் காரை மடக்கிய போலீஸார் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் மூன்று முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பில் போலீஸார் மிகவும் கவனமாக இருக்க இதில் முதல்வர் செல்லும் வாகனத்திற்கு ‘கான்வாய்’ எனப்படும் தனி பாதுகாப்பு அளிக்கப்படும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது முதல்வர் பாதுகாப்புக்காக கோஷல் என்ற தனி அமைப்பை உருவாக்கினார்

முதல்வருக்கு அடுத்து தமிழக ஆளுநருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர் செல்லும் வாகனத்தில் முன்னும் பின்னும் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும். இதற்கு அடுத்து தலைமை நீதிபதி முக்கியப் பிரமுகராக கருதப்படுகிறார்.

ஆனால் அவருக்கு ராணுவ அணிவகுப்பு செல்லாது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று இரவு சென்னையில் இருந்து வெளியூர் செல்லக் கிளம்பினார். அவரது வாகனம் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அவரது வாகனத்தில் ஆளுநர் வெளியூர் செல்லும் போதெல்லாம் ஆளுநர் வாகனம் வரும்போது சாலைகளில் இருபுறமும் போலீஸார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ஆளுநரின் கான்வாய் செல்ல பாதுகாப்பு அளிப்பார்கள்.

இந்நிலையில் நேற்றும் அதேபோன்றுதான் ஆளுநரின் கான்வாய் சென்று கொண்டிருந்தது. அவருக்குப் பின்புறம் கருப்பு நிற பென்ஸ் கார் ஒன்று வந்தது. பல்லாவரம் அருகே ஆளுநரின் வாகனம் சென்றபோது திடீரென அந்த வாகனத்தை பென்ஸ் கார் முந்திச் சென்றது.

இதனால் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்தக் காரை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆளுநர் சென்ற வாகனத்தை, வேறொரு கார் ஒன்று எப்படி முந்திச் சென்றது என உடனடியாக காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் பலகை மூலம் புகார் அளிக்கப்பட்டது .

இந்தச் செய்தியால் காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் ஆகியவை பெரும் பரபரப்பு அடைந்தன. இந்நிலையில் ஆளுநர் வாகனங்களை முந்திச் சென்ற கருப்பு நிற பென்ஸ் காரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். காரை குரோம்பேட்டை, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரித்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் காரின் உரிமையாளர் குரோம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜகான் எனத் தெரியவந்தது . அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது ‘‘தாங்கள் வேண்டுமென்று செய்யவில்லை ஆளுநரின் வாகனங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தோம் எங்களை எந்த போலீஸாரும் தடுக்காததால் முந்திச் சென்றோம். எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. வாகனம் மெதுவாக செல்வதால் நாங்கள் வழக்கம் போல் வந்து செல்வதாக நினைத்து முந்திச் சென்றோம்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து அவருக்கு சிறிய அபராதம் விதித்து வாகனத்தை போலீஸார் விடுவித்தனர். ஆனால் ஆளுநரின் வாகனத்திற்குள் மற்றொரு வாகனம் எப்படி உள்ளே நுழைய முடிந்தது என அறிக்கை அளிக்கும்படி ராஜ்பவன் வட்டாரம் போலீஸாரிடம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x