Published : 29 Mar 2019 11:38 AM
Last Updated : 29 Mar 2019 11:38 AM

தேர்தல் அதிகாரிகளுடன் நமீதா வாக்குவாதம் செய்தாரா?- கணவர் விளக்கம்

சேலத்தில் தனது காரை சோதனையிட முற்பட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நடிகை நமீதா கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து நமீதாவின் கணவர் விளக்கமளித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தியுள்ளனர். அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட முயன்ற போது, காரில் இருந்த நடிகை நமீதா காரை சோதனையிட எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

நான் யார் தெரியுமா? என்று நமீதா அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பெண் காவலர் வந்தால் மட்டுமே சோதனைக்கு அனுமதிக்க முடியும் என தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நமீதாவின் கணவர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில், "மன்னிப்பு கோரிக் கொண்டு இதை நான் ஆரம்பிக்கிறேன். கடந்த சில நாட்களாக செய்திகளில் உலா வரும் தகவல்களால் நீங்கள் நமீதாவை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். என் மீதும் எனது மனைவி நமீதா மீதும் இருக்கும் நியாயத்தை எடுத்துக் கூற விரும்புகிறேன்.

அன்றைய தினம், நாங்கள் ஏற்காடுக்கு ஒரு படப்பிடிப்புக்காகச் சென்று கொண்டிருந்தோம். 8 மணி நேரத்துக்கு மேலாக சாலைப் பயணத்தில் இருந்ததால் எனது மனைவி சோர்வடைந்து பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மணி இரவு 2.30 இருக்கும். ஏற்கெனவே வழியெங்கும் 3 முறை வாகனம் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அதன்பின்னர் சேலம் - ஏற்காடு பகுதியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் எங்கள் காரை நிறுத்தினர். காரில் இருந்தவர்களிடம் மிகவும் கடுமையாக பேசினர். எங்களை கிரிமினல்கள் போல் நடத்தினர்.

எனது மனைவி பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கூறியும் அதிகாரி ஒருவர் பின் புற கதவைத் திறக்க என் மனைவி கிட்டத்தட்ட கீழே விழப்பார்த்தார். அதற்கு மன்னிப்பு தெரிவித்தார் அந்த அதிகாரி. ஆனால், சோதனை செய்தார். என் மனைவியின் கைப்பையை சோதனை செய்ய வேண்டும் என்றார்.

என் மனைவி கைப்பையை சோதனையிட வேண்டுமானால் பெண் காவலரை அழையுங்கள். நான் எனது பையில் சில பெர்சனல் பொருட்களை வைத்திருக்கிறேன் என்றார். இதுதான் விஷயம். ஆனால் , இதை பெரிதாக ஊதிக் கொண்டிருக்கிறார்கள். நமீதா ஒரு பிரபலம் என்பதால் இது பெரிய விஷயமாக்கப்படுகிறது.

இதுவே ஒரு சாதாரண பெண்மனி செய்திருந்தால் பெரிய செய்தியாகியிருந்திருக்காது. ஒரு பிரபலம் என்பதால் ஊதிப் பெரிதாக்கிவிட்டார்கள்.

இந்த சம்பவத்திலிருந்து பெண்கள் தங்களுக்கு இப்ப்டி ஒரு இக்கட்டான நிலை வரும்போது பெண் காவலர்களைக் கோர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x