Published : 29 Mar 2019 09:47 AM
Last Updated : 29 Mar 2019 09:47 AM

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆளுங்கட்சியினருக்கு சவாலாக இருக்கப் போகும் தண்ணீர் பிரச்சினை: திண்டுக்கல் மாவட்ட கிராமப் புறங்களில் மக்கள் தவிப்பு

கோடை தொடங்கியதை அடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையும் தலை தூக்கத் தொடங்கி உள்ளது. இதனால் பிரச்சாரத்தின்போது ஆளுங்கட்சியினருக்கு குடிநீர் பிரச்சினை பெரும் சவாலாக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை தொடங்கியுவுடனேயே தண்ணீர் பிரச்சினையும் தலை தூக்குவது வாடிக்கை. திண்டுக்கல் நகர் பகுதியின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்தேக்கத்தில் தற்போது போதுமான நீர் இல்லை. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. வேட்பாளர்கள் நகர் பகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, கிராமப் பகுதிகளில் தற்போதுதான் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர்.

கிராமப்பகுதிகளில் பிரச்சாரம் செய்யும்போது குடிநீர் பிரச்சினை குறித்து, மக்கள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. இதனால் ஆளுங்கட்சியினருக்கு சிக்கல் எழுந்துள்ளது. மக்களின் எதிர்ப்பைச் சமாளித்து, அவர்களை சமாதானப்படுத்தி வாக்குகளை பெற பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டிய நிலை ஆளுங்கட்சி கூட்டணி வேட்பாளருக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் தண்ணீர் பிரச்சினையை ஒரு குறையாகக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மக்களின் தண்ணீர் பிரச்சினை எதிர்ப்புகளை தவிர்க்க ஆளுங்கட்சியினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

ஆத்தூர் ஒன்றியம் எஸ்.பாறைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கே.ராமநாதபுரத்தில் கோடை தொடங்கும் முன்பே குடிநீர் பிரச்சி னையும் தொடங்கி விட்டது. நீண்ட நேரம் குழாயடியில் காத்திருந்து, ஒரு சில குடம் தண்ணீரே எடுத்துச் செல்லவேண்டிய நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில், குடிநீர் பிரச்சினை அதிகமாகி மக்கள் போராடத் தயாராகி வருவதால் ஆளும்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x