Published : 27 Mar 2019 12:07 PM
Last Updated : 27 Mar 2019 12:07 PM

அடிமட்டத்தில் இருந்து வந்து முதல்வர் ஆனவன் நான்: எடப்பாடி பழனிசாமி உருக்கம்

 

 

 

மற்றவர்களைப் போல் இல்லாமல், அடிமட்டத்தில் இருந்து வந்து முதல்வர் ஆனவன் நான் என்று பிரச்சாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி உருக்கமாகப் பேசினார்.

 

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கந்தன்சாவடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''அவர்கள் ஆட்சியில் இருந்த 10 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மிகப்பெரும் துயரத்துக்கு ஆளாகினர். கிடைக்கின்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாமல் மக்களை உதாசீனப்படுத்தியது திமுக ஆட்சி.

 

நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நாடாளுமன்றத்தில் உரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் தீர்வு கிடைக்கும். ஆனால் திமுக அதைச் செய்யவில்லை. ஆனால் தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல்கொடுப்பது அதிமுக.

 

நீங்கள் (ஸ்டாலின்) அரசியலுக்கு வந்த வழி எது என்று அனைவருக்குமே தெரியும். கஷ்டப்பட்டா நீங்கள் கட்சித் தலைவர் ஆனீர்கள்? கருணாநிதி முதல்வராக இருந்தார். திமுகவின் தலைவராகவும் இருந்தார்.

 

அந்த போர்வையில் கொல்லைப் புறத்தின் வழியாக பதவிக்கு வந்தவர் நீங்கள். அவரின் மகனாக இருந்ததால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. கட்சியில் உயர்ந்த பதவிக்கு வருவது என்று சொன்னால், கிளைச் செயலாளர், ஒன்றிய, மாவட்டப் பொறுப்புகள், மாநிலப் பொறுப்பு என்று இருக்கவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு மட்டத்திலும் என்ன பிரச்சினை என்று தெரியும். ஆனால் நீங்கள் அப்படியில்லை.

 

ஆக கட்சியிலும் ஒன்றும் தெரியாது. நாட்டுமக்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. ஆனால் நான் அப்படியல்ல. கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன். 1974-ல் நான் கல்லூரியில் படிக்கும்போதே, கிளைக்கழக செயலாளராக அரசியல் வாழ்க்கையத் தொடங்கினேன். படிப்படியாக எம்எல்ஏ, எம்.பி., அமைச்சர் ஆனேன். இப்போது நீங்கள் எல்லாம் சேர்ந்து முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள். உழைப்பால் வந்தவன் நான். அதுதான் நிலைத்திருக்கும்'' என்றார் எடப்பாடி பழனிசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x