Published : 26 Mar 2019 09:47 PM
Last Updated : 26 Mar 2019 09:47 PM

1952- முதல் நாடாளுமன்ற தேர்தல்களும், தமிழக பெண் எம்பிக்களும்: ஒரு பார்வை

முதல் நாடாளுமன்ற தேர்தல்முதல் தற்போதுவரை போட்டியிட்டு வென்ற பெண் வேட்பாளர்கள் ஒரு பார்வை.

1952-ல் உருவான இந்தியாவின் முதல் மக்களவையில், தமிழகத்திலிருந்து இரண்டு பெண்கள்  பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, உறுப்பினர்களாக இடம் பெற்றனர். ஒருவர் திருவள்ளூர் (தனி) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மரகதம் சந்திரசேகர். மற்றொருவர் திண்டுக்கல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மு சுவாமிநாதன்.

இந்த மக்களவையில்  நாடெங்கிலுமிருந்து மொத்தம் 24 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள்.

1957-ம் ஆண்டு இரண்டாவது மக்களவையிலும் (1957) மொத்தம்  24 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில், கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வதி கிருஷ்ணன் தான், தமிழகத்தின் ஒரே பெண் உறுப்பினர்.

1962-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மூன்றாவது மக்களவையில் இடம்பெற்றிருந்த 37  பெண் உறுப்பினர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மயூரம் (இன்றைய மயிலாடுதுறை) தனித் தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் தேர்வானவர் மரகதம் சந்திரசேகர். மற்றொருவர் திண்டுக்கல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் டி எஸ் சௌந்தரம் ராமச்சந்திரன்.

1967-ம் ஆண்டு நான்காவது மக்களவையில்  மொத்தம் 33 பெண் உறுப்பினர்கள்  இருந்தார்கள். ஆனால், ஒருவர் கூட  தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை.

1971-ம் ஆண்டு உருவான ஐந்தாவது மக்களவையில், மொத்தம் 28  பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். இவர்களில் சிவகாசி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலட்சுமி வெங்கடசாமியும், கோவை தொகுதியில் இருந்து மீண்டும் தேர்வான பார்வதி கிருஷ்ணனும் அடங்குவர்.

 1977-ல் அமைக்கப்பட்ட ஆறாவது மக்களவையில் மொத்தம் 21 பெண் உறுப்பினர்கள் தான். இதில்,  கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வதி கிருஷ்ணனும்,  சிவகாசி தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலட்சுமி வெங்கடசாமியும் இடம் பெற்றிருந்தார்கள்.

1980-ம் ஆண்டு ஏழாவது மக்களவையில் மொத்தம்  32  பெண் உறுப்பினர்கள். ஒரு பெண்  உறுப்பினர் கூட தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை.

1984-ல் உருவான எட்டாவது மக்களவையில்  45  பெண் உறுப்பினர்கள்  இருந்தனர்.  இந்த அவைக்கு தென் சென்னையிலிருந்து டாக்டர் வைஜெயந்திமாலா பாலியும், ஸ்ரீபெரும்புதூர் தனித்தொகுதியில் இருந்து மரகதம் சந்திரசேகரும் (3-ஆவது முறையாக மக்களவை உறுப்பினர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1989-ல் அமைக்கப்பட்ட ஒன்பதாவது  மக்களவையில்  28 பெண்கள்  உறுப்பினர்களாக இருந்தார்கள். ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக மரகதம் சந்திரசேகரும் (4வது முறை மக்களவை உறுப்பினர்), தென் சென்னையில் இருந்து இரண்டாவது முறையாக வைஜயந்திமாலா பாலியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1991-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பத்தாவது மக்களவையில்  மொத்தம் 42 பெண் உறுப்பினர்கள்  இருந்தனர். ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியிலிருந்து 3-வது முறையாக மரகதம் சந்திரசேகர் (5-வது முறை மக்களவை உறுப்பினர்),  நாகப்பட்டினம் தனித் தொகுதியிலிருந்து டாக்டர் பத்மா,  திருச்செங்கோடு தொகுதியிலிருந்து டாக்டர் டி எஸ் சௌந்தரம் ஆகியோர் இந்த மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1996-ம் ஆண்டு உருவான  11-வது மக்களவையில் மொத்தம் 41 பெண் உறுப்பினர்கள்  இருந்தனர். தமிழகத்திலிருந்து ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

1998-ம் ஆண்டு அமைக்கப்பட்ட  12-வது  மக்களவையில் 44 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். ராசிபுரம் தனித்தொகுதியில் இருந்து டாக்டர் வி சரோஜா மட்டும் இதில் இடம் பெற்றிருந்தார்.

1999-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பதின்மூன்றாவது மக்களவையில் இருந்த பெண் உறுப்பினர்கள் 52 பேர். ராசிபுரம் தனித் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் வி சரோஜா,  ஆங்கிலோ-இந்தியன் நியமன உறுப்பினராக டாக்டர் பெட்ரிக்ஸ் டிசோசா ஆகியோர், தமிழகத்திலிருந்து,  அவையில் இடம் பெற்றிருந்தனர்.

2004-ம் ஆண்டு பதினான்காவது மக்களவையில் 52 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். ராமநாதபுரம் தொகுதியிலிருந்து எம்.எஸ்.கே.பவானிராஜேந்திரன், திருச்செங்கோடு தொகுதியிலிருந்து சுப்புலட்சுமிஜெகதீசன்,  ராசிபுரம் தனித்தொகுதியில் இருந்து, கே.ராணி,  திருச்செந்தூர் தொகுதியில் இருந்து வி.ராதிகாசெல்வி ஆகியோர்  அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2009-ம் ஆண்டு  உருவான பதினைந்தாவது மக்களவையில் 64  பெண்கள் இருந்தார்கள். கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெலன் டேவிட்சன் மட்டுமே தமிழகத்திலிருந்து இடம் பெற்றிருந்தார்.

2014-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட, தற்போது இருக்கும் 16-வது மக்களவையின் (2014),  பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கை 66.  காஞ்சிபுரம் தனித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கே மரகதம், தென்காசி தனித் தொகுதியில் இருந்து தேர்வான எம் வசந்தி,  திருப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வி சத்யபாமா,  திருவண்ணாமலை தொகுதியிலிருந்து தேர்வான ஆர் வனரோஜா ஆகியோர் இந்த அவையில் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது 2019-ம் ஆண்டு மக்களவைக்கு அதிமுகவிலிருந்து திமுக சார்பில் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, பாஜக சார்பில் தமிழிசை, அமமுகவில் சாருபால தொண்டைமான், நாம் தமிழர் சார்பில் 20 பெண் வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமிலா நாசர் மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x