Published : 26 Mar 2019 05:49 PM
Last Updated : 26 Mar 2019 05:49 PM

செந்தில் பாலாஜியை கை வைத்துத் தள்ளிய டிஎஸ்பியை மாற்ற வேண்டும்: தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

செந்தில் பாலாஜியின் கழுத்தில் கை வைத்துத் தள்ளிய டிஎஸ்பி, ஏற்கெனவே புகார் அளித்த 10 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை திமுக சட்டத்துறைச் செயலர் ஆர்.எஸ்.பாரதி சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

''தமிழக தேர்தல் அதிகாரியைச் சந்தித்து ஏற்கெனவே கொடுக்கப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டுள்ளோம்.

தமிழகத்தில் பல காவல்துறை அதிகாரிகள் ஆங்காங்கே அதிமுக செயலாளர்கள் போலவே செயல்படுகிறார்கள். குறிப்பாக கரூர் மாவட்ட டிஎஸ்பி கும்பராஜா நேற்று வேட்புமனுத் தாக்கலின்போது எங்கள் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் கழுத்தில் கை வைத்துத் தள்ளியுள்ளார்.

அவர் கடந்த 10 ஆண்டுகளாக கரூரில் உதவி ஆய்வாளராக, டிஎஸ்பியாகப் பணியாற்றி வருகிறார். அதிமுகவின் தயவோடு இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆகவே அவரை வைத்துக்கொண்டு தேர்தலில் செயல்பட முடியாது. அவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

அதேபோன்று அதிமுக புதிய முறையில் பணப்பட்டுவாடா செய்யத் திட்டமிட்டுள்ளனர். 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில் பெரும்பாலானவற்றில் அதிமுகவினர் தலைவராக உள்ளனர். இதற்கு முன்னர் பொதுத்தேர்தல்களில் கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்களாக உள்ளவர்களைப் பயன்படுத்துவது கிடையாது.

ஆனால், ஜாக்டோ- ஜியோ அரசு ஊழியர்கள் கொதித்துப் போய் போராட்டம் நடத்தியுள்ளார்கள் என்பதால் முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கப் பணியாளர்களை வைத்து தேர்தல் நடத்த ரகசியக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அதன் ஆணையர் பழனிசாமியையும் மாற்ற வேண்டும். அதேபோன்று காவல்துறை உயர் அதிகாரிகள் 10 பேரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

அவர் அதைக் காது கொடுத்துக் கேட்டார். நடவடிக்கை எடுக்கிறேன் என்று தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் குறித்து குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளைக் கூற முடியுமா? என்று தமிழக தேர்தல் அதிகாரி கேட்டார். அதை தாராளமாகத் தருகிறோம் என்று கூறியுள்ளோம்.  பொத்தாம் பொதுவாக நாங்களும் புகார் சொல்ல விரும்பவில்லை.

அதேபோன்று 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அங்குள்ள அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதையும் பரிசீலிப்பதாக தெரிவித்தார்''.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x