Published : 26 Mar 2019 02:36 PM
Last Updated : 26 Mar 2019 02:36 PM

ஸ்ரீபெரும்புதூர் அடுக்குமாடிக் குடியிருப்பில் விஷவாயு தாக்கம்; ஒருவரை ஒருவர் காப்பாற்றப் போய் 6 பேர் உயிரிழந்த சோகம்; ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கிய 6 பேர் விஷவாயு தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நெமிலி செல்வபெருமாள் நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி (53). இவருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பை வாடகைக்கு விட்டிருந்தார்.

ஸ்ரீபெரும்பத்தூர் நெமிலி பகுதியில் இன்னும் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படாததால் அங்குள்ள குடியிருப்புகளில் செப்டிக் டேங்க் வசதி மூலம் கழிவுநீர் அகற்றப்படும். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் உள்ள செப்டிக் டாங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவருக்கு உதவியாக அவரது மகன்கள் கண்ணன் (27) மற்றும் கார்த்தி (26) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். செப்டிக் டேங்கை சுத்தம் செய்த பின் அதனுள்ளே மீதியுள்ள பகுதியைச் சுத்தம் செய்ய கிருஷ்ணமூர்த்தி இறங்கினார்.

அப்போது அவரை விஷவாயு தாக்கியது. இதனால் அவர் டேங்க் உள்ளேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து திடுக்கிட்ட அவரது மகன் கார்த்திக் உள்ளே இறங்கினார். அவரும் விஷவாயு தாக்கி மயங்கி உள்ளே விழுந்தார்.

இதைப்பார்த்து பதறிய கண்ணன் இருவரையும் காப்பாற்ற உள்ளே இறங்கினார். அவரையும் விஷவாயு தாக்கியதால் அவரும் உள்ளே விழுந்தார். இதைப் பார்த்து கிருஷ்ண மூர்த்தியின் குடும்பத்தினர் அலறி சத்தம் போட்டனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த கிருஷ்ணமூர்த்தியின் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் சுரதாபாய் (28) மற்றும் பரமசிவம் இருவரும் அடுத்தடுத்து உள்ளே குதித்தனர். அவர்களையும் விஷவாயு தாக்கியதில் உள்ளே மயங்கி விழுந்தனர்.

இதைப்பார்த்து அவர்களது உறவினர்கள் சத்தம்போட்டு கூக்குரலிட்டனர். இதை அவ்வழியாக சென்ற இளைஞர் லட்சுமி காந்தன் என்பவர் பார்த்து என்னவென்று விசாரித்துள்ளார். உள்ளே 5 பேர் மயங்கி விழுந்துள்ளனர் எனக்கூறவே சற்றும் யோசிக்காமல் அவரும் மற்றவர்களைக் காப்பாற்ற உள்ளே குதித்தார்.

அதில் அவரும் மயக்கமானார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உள்ளே அனைவரும் மயங்கிக் கிடப்பதாக நினைத்த மற்றவர்கள் தீயணைப்புத்துறை, போலீஸ், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர்

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் உள்ளே இறங்கி 6 பேரையும் மேலே தூக்கி வந்தனர். அவர்களைச் சோதித்தபோது அனைவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. விஷவாயு தாக்குதல் குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாமல் அடுத்தடுத்து இறங்கியவர்கள் தொடர்ந்து உயிரிழந்தனர்.

இதைப்பார்த்த அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். வழிப்போக்கராகச் சென்ற இளைஞரும் உயிரிழந்தது கூடுதல் சோகம். அவரது குடும்பத்துக்குத் தகவல் அளித்த போலீஸார் 6 பேரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

6 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷவாயு உள்ள செப்டிக் டேங்கை தீயணைப்புத் துறையினர் கெமிக்கல் நுரை கொண்டு சுத்தம் செய்து சீல் வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x