Published : 23 Mar 2019 10:35 PM
Last Updated : 23 Mar 2019 10:35 PM

நீட் தேர்வு, 7 பேர் விடுதலை, மேகதாது அணை எதையும் நிறைவேற்ற முடியவில்லை: எதற்கு பாஜகவுடன் கூட்டணி?- ஸ்டாலின் கேள்வி

தமிழகத்துக்கான குறைந்தபட்ச கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற முடியாத பாஜகவுடன் எதற்காக கூட்டணி வைக்கிறீர்கள் என்ன சாதித்தீர்கள் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அரூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஸ்டாலின் பேசியதாவது:

“மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அது வெற்றி பெற்றால் தான் தமிழகம் வளர்ச்சி பெற முடியும் என்று, சொன்னவர் யார் என்று கேட்டால் எடப்பாடி. நான் கேட்கின்றேன் சொல்வதற்கு நீங்கள் வெட்கப்படவில்லையா? இப்பொழுதே நீங்கள் ஒரே கூட்டணியில் தான் இருக்கின்றீர்கள்.

தமிழகம் என்ன வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றதா? அ.தி.மு.க வின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்கள். பக்கம் 20-ல் ”இந்தியா மந்தமான நிலையில் இருக்கின்றது என்று அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் வந்திருக்கின்றது. அதைச் சொல்லிவிட்டு சொல்கின்றார்கள், வேளாண் துறை தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளில் பொருளாதாரம் மந்தநிலையால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அந்தத் திட்டங்களை மாநில அரசின் மூலமாக செயல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுக்காட்டி இருக்கின்றார்கள். எனவே, மந்தமாக இருப்பவர்களோடு சேர்ந்து இவர்களும் மந்தமாக ஆகலாமே தவிர நிச்சயமாக வளர்ச்சி என்பதே கிடையாது என்பதுதான் இதில் தெளிவாக தெரிகின்றது.

அதுமட்டுமல்ல விலைவாசியை மோடி அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றார் என்று எடப்பாடி நேற்றைக்கு பேசியிருக்கின்றார். ஆனால் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்கின்றார் என்று கேட்டால், விலைவாசி உயர்ந்துகொண்டே வந்து கொண்டிருக்கின்றது என்று வேதனையோடு தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.

அது மட்டுமல்ல இன்னொரு கேள்வியை கேட்டிருக்கின்றார். மத்தியில் திமுக கூட்டணி ஆட்சியில் இடம்பெற்று இருந்தார்களே அப்பொழுது என்ன செய்தார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டு இருக்கின்றார். தி.மு.க-வை பார்த்து என்ன செய்தீர்கள், என்று கேட்கிறீர்களே? நான் அவரைப் பார்த்து கேட்கின்றேன், நாங்கள் என்ன செய்யவில்லை? அதை நீங்கள் சொல்லுங்கள்.

அதற்குப் பிறகு நான் விளக்கம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன்பு இதே பிரதமர் மோடி அவர்கள், மெட்ரோ ரயில் திட்டத்தை வந்து திறந்து வைத்தார். அந்த மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது யார்? திமுகதான்.

நான் கேட்கிறேன். உங்களால் கஜா நிவாரணம் வாங்க முடிந்ததா? நீட் தேர்வு ரத்து செய்ய முடிந்ததா? பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் அமைச்சரவையில் தீர்மானம் போடுகின்றீர்கள், தீர்மானத்தை கவர்னர் இடத்தில் கொடுக்கின்றீர்கள். இதுவரையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார்களா?

நீட் தேர்வு என்பது என்ன ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடிய மாணவர்கள் அவர்கள் மருத்துவ படிப்பிற்கு ஆபத்தான ஒரு சூழ்நிலையை உருவாக்கக்கூடிய ஒரு நிலையில் அந்த நீட் தேர்வு வந்துள்ளது. எனவே, அதை அறவே ரத்து செய்யப்பட வேண்டும். அது தேவையில்லை என்று சொல்லி தொடர்ந்து நாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை டெல்லிக்கு அனுப்பி வைக்கின்றோம், அனுப்பிய தீர்மானத்தின் மீது ஏதேனும் நடவடிக்கையை இந்த ஆட்சி எடுத்துள்ளதா? இல்லை. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்கின்ற முயற்சியில் இந்த ஆட்சி ஈடுபடவில்லை.

மேகதாது அணையை தடுக்க முடிந்ததா? அதையும் தடுக்க முடியவில்லை. எதையும் செய்ய முடியவில்லை, பிறகு எதற்காக நீங்கள் பி.ஜே.பி கட்சியோடு கூட்டணி சேர்ந்து இருக்கின்றீர்கள்? ஒரே ஒரு லட்சியம் தான், ஜெயிலுக்குப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஒரு கூட்டணி சேர்ந்து இருக்கின்றது என்பதே தவிர வேறல்ல”

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x