Published : 23 Mar 2019 05:33 PM
Last Updated : 23 Mar 2019 05:33 PM

பொருந்தாக் கூட்டணி வைத்து 10 கோரிக்கைகள் வைத்தீர்களே; 8 வழிச்சாலை கோரிக்கை என்ன ஆயிற்று?- ராமதாஸுக்கு ஸ்டாலின் கேள்வி

பத்து அம்சம் கோரிக்கை வைத்து இருக்கின்றோம் என்று ராமதாஸ் சொல்லுகின்றார். அந்த 10 அம்ச கோரிக்கையில் சென்னையில் இருந்து சேலம் வரையில் போடக்கூடிய எட்டு வழிச் சாலை இருக்கிறதா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் பேசியபோது பாமகவை கடுமையாக விமர்சித்தார். ராமதாஸ், அன்புமணி ராமதாஸுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

ஸ்டாலின் பேச்சு:

''விழுப்புரத்தில் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகின்ற பொழுது ஒரு செய்தியைச் சொல்லி இருக்கின்றார். மக்கள் எந்த வகையிலும் முகம் சுளிக்காதவாறு ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

யார் சொல்கின்றார் பெரிய ஐயா சொல்கின்றார். இவர் பேசிய பேச்சை பார்த்து மக்கள் தான் இப்பொழுது முகம் சுளித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதே பெரிய ஐயா பணம் கொடுத்து முதல்வர் பதவியை குத்தகைக்கு எடுத்திருக்கிறார் என்று முன்னர் சொன்னவர்.

ஆனால் இப்பொழுது ஏதோ ஒரு ஆதாயத்திற்காக செஞ்சோற்றுக் கடன் என்று சொல்வார்களே அந்தக் கடனுக்காக எடப்பாடி பழனிசாமி ஆட்சியை புகழக்கூடிய ஒரு புலவராக பெரிய ஐயா இன்றைக்கு மாறி இருக்கிறாரே தவிர வேறல்ல.

பொருந்தாக் கூட்டணி, மக்கள் விரும்பாத கூட்டணியை இன்றைக்கு பாமக வைத்திருக்கின்றது. பாமக தொண்டர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை நாங்கள் வெளிப்படையாகப் பார்க்கின்றோம்.

அடுத்து சின்ன ஐயா, டாக்டர் அன்புமணி அவர் எப்பொழுதும் பார்ப்பதற்கு கம்பீரமாக கொஞ்சம் கவர்ச்சியாக இருப்பார். ஆனால், இப்பொழுது அவர் முகத்தைப் பாருங்கள். அந்த கம்பீரமும் இல்லை - கவர்ச்சியும் இல்லை - வேகமும் இல்லை - துடிப்பும் இல்லை.

ஏனென்றால், அடுத்து நான் தான் முதல்வர். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியவர். ஆனால், இன்றைக்கு அவரின் நிலை என்ன?

ஏதோ ஒரு நிர்பந்தத்தில் நீங்கள் போட்டி போடுகிறீர்கள். நேற்றைய தினம் நம்முடைய, தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசுகின்ற பொழுது சொன்னார்.

அன்புமணியிடத்தில் கம்பீரம் இல்லை. முகத்தில் மலர்ச்சி இல்லை. அதனால் இப்பொழுது கூட ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் என்று ஒரு வேண்டுகோள் வைத்தார். போட்டி போடுவதற்கு விருப்பம் இல்லை கட்டாயப்படுத்தி அவரை நிற்க வைத்து இருக்கின்றார்கள். எனவே இப்பொழுதும் நாங்கள் சொல்கின்றோம், இன்னும் வேட்பு மனு வாபஸ் வாங்குவதற்கு நாட்கள் உள்ளன.

அந்த நாளுக்குள் நீங்கள் வாபஸ் வாங்கி விட்டுப் போனால் தான் உங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். எனவே, அந்த நிலையில் தான் இன்றைக்கு அவர் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கிறார். பத்து அம்சக் கோரிக்கை வைத்து இருக்கின்றோம் என்று பெரிய ஐயா சொல்கின்றார். நான் கேட்கின்றேன் அந்த 10 அம்சக் கோரிக்கையில் சென்னையில் இருந்து சேலம் வரையில் போடக்கூடிய எட்டு வழிச் சாலை இருக்கிறதா? அதற்காகப் போராடினீர்களே.

8 வழிச் சாலை இருக்கக்கூடாது என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி போராடவில்லையா? அன்புமணி ராமதாஸே நேரடியாக வந்து அதைப் பார்க்கவில்லையா? அதற்காக அவர் கைது செய்யப்படவில்லையா? கைது செய்யப்பட்டது மட்டுமல்ல, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

அந்த வழக்கும் நிலுவையில் இருக்கின்றது. பத்து அம்சக் கோரிக்கை வைத்தீர்களே கூட்டணி சேருகின்ற நேரத்தில் அந்தப் பத்து அம்சக் கோரிக்கையில் அது இடம் பெற்றிருக்கின்றதா? எனவே, கூட்டணி என்கின்ற பெயரில் கொள்கையை அடகு வைத்து மக்களுக்கு துரோகம் செய்து இருக்கக்கூடிய கட்சி தான் பாட்டாளி மக்கள் கட்சி''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x