Published : 23 Mar 2019 03:31 PM
Last Updated : 23 Mar 2019 03:31 PM

காலியான சாலையில் திறந்த வேனில் போகிறார் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கிண்டல்

சேலத்தில் சொந்த ஊரில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். ஆனால், சாலையே காலியாக உள்ளதாக புகைப்படம் வெளியாகியுள்ளது என ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.

அரூரில் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

''இங்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இருக்கின்றீர்களே. இதில் கால்வாசிக் கூட்டம் கூட அங்கு இல்லை என்பதை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

திறந்த வேனில் காலியாக இருக்கக்கூடிய ரோட்டில் முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி போய்க் கொண்டிருக்கக் கூடிய காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன.

பத்திரிகைகளில் புகைப்படமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. வாட்ஸ் அப்பில் தொலைக்காட்சிகளில் ஆதாரமாக செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நேற்றைக்கு நான் சேலத்தில் என் பிரச்சாரத்தை நடத்துகின்ற நேரத்தில் தான், முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியும், சேலத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை நடத்தியிருக்கிறார்.

அப்படி நடத்திய நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் பற்றி பேசி இருக்கின்றார். மறைந்த ஜெயலலிதா பற்றி பேசி இருக்கின்றார். நான் கேட்க விரும்புவது எம்.ஜி.ஆரைப் பற்றி ஜெயலலிதாவைப் பற்றி இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகின்றாரே, பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது?

காரணம் இந்த இருவரும் அதிமுக கட்சியை இவரிடத்தில் ஒப்படைத்து விட்டு மறைந்து விட்டார்கள் என்று எடப்பாடி பேசியிருக்கின்றார். அதாவது, எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதிமுக என்ற கட்சியை இவரிடத்தில் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்களாம். அதை இவர் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறாராம்.

இப்படி நேற்றைக்கு அவர் பேசியிருக்கிறார். நான் சொல்ல விரும்புவது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டு நரேந்திர மோடியையும், அமித் ஷாவையும் தெய்வமாக இன்றைக்கு வணங்கிக் கொண்டு இருக்கக்கூடியவர் எடப்பாடி பழனிசாமிதான். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அதிமுகவை இன்றைக்கு, அடகு கடையில் அடகு வைத்திருக்கிறார்கள். அமித் ஷாவிடம் கொண்டு சென்று அடகு வைத்திருக்கின்றார்கள்.

நான் சொல்கின்றேன் மார்வாடி கடையில் அடகு வைத்தால் கூட மீட்டு விடலாம். ஆனால், அமித் ஷாவிடம் சென்று நீங்கள் அடகு வைத்து இருக்கின்றீர்களே அதை மீட்கவே முடியாது.

ஜெயலலிதாவை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டித்தீர்த்து பல்வேறு கோணங்களில் விமர்சனங்கள் செய்து ஒரு புத்தகத்தை எழுதி அதிமுகவின் கதை என்ற தலைப்பில் அந்தப் புத்தகத்தை வெளியிட்டவர் ராமதாஸ், அவர்தான் அந்தப் புத்தகத்தை வெளியிட்டு இருக்கின்றார்.

எனவே ஜெயலலிதாவை திட்டித் தீர்த்து புத்தகத்தை வெளியிட்டு இருக்கக்கூடிய பெரியய்யாவோடு இன்றைக்கு கூட்டணி வைத்திருக்கிறார். இந்நிலையில் எப்படி ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி நடப்பார்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மோடி அன்றைக்கு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது ஜெயலலிதா என்ன சொன்னார் மோடியா இந்த லேடியா? என்று கேட்டார். அப்படிப்பட்ட நிலையில் இருந்தவர் ஜெயலலிதா.

ஆனால் இன்றைக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தக் கட்சியை, ஒரு ஆட்சியை இன்றைக்கு பாஜகவிடன் அடமானம் வைத்திருக்கிறார்கள்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x