Last Updated : 23 Mar, 2019 03:10 PM

 

Published : 23 Mar 2019 03:10 PM
Last Updated : 23 Mar 2019 03:10 PM

கோவை தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளதா: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

கொங்கு மண்டலத்தின் அரசியலைப் பிரதிபலிக்கும் முக்கியத் தொகுதியாக கோவை விளங்கி வருகிறது. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பாக கோவை மற்றும் திருப்பூர் பகுதிகள் வரை பரவிக்கிடந்த இந்தத் தொகுதி தற்போது கோவை மற்றும் புறநகர் பகுதிகளைக் கொண்ட தொகுதியாக விளங்குகிறது.

தொழில் நகரம் என்பதால் தொடக்க காலத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு வலிமையான தளம் கொண்ட பகுதியாக விளங்கியது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே இங்கு போட்டியிட்டு வென்றுள்ளன.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்குப் பிறகு பாஜகவுக்கு ஆதரவு தளம் கொண்ட தொகுதியும் கோவை. அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் பலமுறை இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டு வந்துள்ளது.

இருப்பினும் அதிமுகவுக்கு இங்கு வாக்கு வங்கி உள்ள நிலையில் கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட அதிமுக வென்றது. எனினும் கூட்டணியுடன் போட்டியிட்ட பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று அதிமுகவிடம் தோல்வியுற்றார். திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஒரு காலத்தில் வலிமையான ஆதரவு தளத்தை வைத்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிக குறைவான வாக்குகளே பெற்றது. 

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுகநாகராஜன்4,31,717
பாஜகசி.பி.ராதாகிருஷ்ணன்3,89,701
திமுககணேஷ் குமார்2,17,083
காங்கிரஸ்பிரபு56,962
சிபிஎம்நடராஜன் 34,197

                               

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்

கோவையில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த தேர்தலில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 5 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு அதிமுக வென்றது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்ட திமுக சிங்காநல்லூரில் மட்டும் வென்றது. சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் மரணமடைந்துள்ள நிலையில் தற்போது அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக 32 ஆயிரம் வாக்குகளும், கவுண்டம்பாளையத்தில் 22 ஆயிரம் வாக்குகளும் பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளிலும் பாஜக ஒரளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.

பாஜக - சிபிஎம்

அதிமுக வலிமையாக உள்ள கொங்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியான கோவையில் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு இந்த தொகுதி ஓதுக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியிலும் கூட்டணிக் கட்சியான சிபிஎம் சார்பில் பி.ஆர்.நட்ராஜன் போட்டியிடுகிறார். அமமுக உட்பட மற்ற கட்சிகளுக்கு இங்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. இருப்பினும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபல வேட்பாளர் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தின் 3-வது பெரிய நகரம் கோவை. தமிழகத்தில் அதிகமாக தொழில் வளர்ச்சி அடைந்த பகுதி இது. நூற்பாலைகள் தொடங்கி மோட்டார் தயாரிப்பு என சாதாரண சிறு சிறு தொழில்கள் அதிக அளவில நடைபெறும் தொகுதி. அதிக பொருளாதார வலிமை மிக்க நகரமாக தமிழகத்தில் கோவை திகழ்ந்து வருகிறது.

கோவை நகர் சார்ந்த பல பிரச்சினைகள் தேர்தலில் எதிரொலிக்கின்றன. இதுமட்டுமின்றி சென்னைக்கு அடுத்தபடியாக நகர்ப்புறம் சார்ந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்பதால் உள்ளூர் பிரச்சினைகளையும் தாண்டி, மாநில, தேசிய அளவிலான பிரச்சினைகளும் எதிரொலிக்கும்.

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் அதிமுகவின் வலிமையான வாக்கு வங்கியுடன் பாஜகவின் செல்வாக்கும் கூடுதல் பலம். அதேசமயம் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுக்கு இங்கு வாக்கு வங்கி இல்லை.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதால் இரு தேசியக் கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக உள்ளது. திமுகவை தவிர அந்த கூட்டணியில் இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமின்றி காங்கிரஸுக்கும் இங்கு ஓரளவு வாக்குகள் உண்டு.

சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பி.ஆர்.நட்ராஜன் இருவருமே இத்தொகுதியில் ஏற்கெனவே எம்.பி.யாக இருந்தவர்கள். இதனால் இருவருக்குமே தொகுதியில் அதிகமான அறிமுகமும், தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. 

முந்தைய தேர்தல்கள்

 

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1971  பாலதண்டாயும், சிபிஐராமசாமி, ஸ்தாபன காங்
1977பார்வதி கிருஷ்ணன், சிபிஐலட்சுமணன், ஸ்தாபன காங்
1980இரா.மோகன், திமுகபார்வதி கிருஷ்ணன், சிபிஐ
1984குப்புசாமி, காங்உமாநாத், சிபிஎம்
1989குப்புசாமி, காங்உமாநாத், சிபிஎம்
1991குப்புசாமி, காங்ரமணி, சிபிஎம்
1996ராமநாதன், திமுக   குப்புசாமி, காங்
1998சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜகசுப்பையன், திமுக
1999சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜகநல்லக்கண்ணு, சிபிஐ
2004-09சுப்பையன், சிபிஐசி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக
2009-14  நடராஜன், சிபிஎம்பிரபு, காங்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x