Last Updated : 23 Mar, 2019 09:25 AM

 

Published : 23 Mar 2019 09:25 AM
Last Updated : 23 Mar 2019 09:25 AM

வாக்காளர்களை கவர ‘மீம்ஸ்’ மூலம் பிரச்சாரம்

அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவர பேஸ்புக் வலைதளத்தில் ‘மீம்ஸ்’ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது.

வழக்கமாக தேர்தல் சமயங்களில் பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்தல், வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தல் ஆகியவை முக்கிய பிரச்சார உத்தியாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் மாற்றம் அடைந்துள்ளது. பொதுக்கூட்டம், வீதி பிரச்சாரங்கள் நடந்தாலும், ஸ்மார்ட்போன்களின் வழியாக ‘மீம்ஸ்’ பிரச்சாரங்களும் ஒரு பக்கம் தீவிரமாக நடக்கின்றன.

தற்போது பெரும்பாலானவர்களிடம் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் பெரும் சதவீதத்தினர் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் இந்த வகை செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இவர்களது வாக்குகளை அறுவடை செய்ய அரசியல் கட்சிகள் சார்பில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு ‘மீம்ஸ்’ பிரச்சாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரபலமான புகைப்படங்கள், திரைப்படக் காட்சி புகைப்படங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, தற்கால அரசியல் சூழலுக்கு ஏற்ப வாசகங்களை சேர்த்து ‘மீம்ஸ்’ புகைப்படமாக உருவாக்கி தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. சில அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் இதற்காக பேஸ்புக் வலைதளத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய தனி பக்கத்தை உருவாக்கி உள்ளனர்.

மீம்ஸ் பிரச்சாரம் இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. தங்கள் கட்சி சாதனை, வேட்பாளர்களின் பெயர் விவரம், அவருக்கு வாக்களித்தால் ஏற்படும் நன்மைகள், தங்கள் கட்சி செய்த சாதனை போன்றவை குறித்து ‘மீம்ஸ்’ வெளியிட்டு வாக்கு சேகரிப்பது முதல் வகை ஆகும். எதிர்க்கட்சியின் செயல்பாடுகள், அவர்களது குறைகள், அவர்களது வேட்பாளர்களின் செயல்பாடுகள் போன்றவை குறித்த வாசகங்களை மீம்ஸ் புகைப்படங்களாக வெளியிட்டு தங்களது கட்சிக்கு வாக்கு சேகரிப்பது இரண்டாவது வகை. அரசியல் கட்சிகள் இந்த இரண்டு வகை பிரச்சார யுக்திகளையும் கடைபிடித்து ‘மீம்ஸ்’ புகைப்படங்களை உருவாக்கி, பேஸ்புக் வலைதளம் மூலம் பகிர்ந்து, வாக்காளர்களை கவர்ந்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் போன்றோரை எளிதில் கவரவும் இந்த வகை ‘மீம்ஸ்’ பிரச்சாரங்களுக்கு அரசியல் கட்சியினர் தரப்பிலும் வரவேற்பு எழுந்துள்ளது. எளிதில் ஏராளமான வாக்காளரை பேஸ்புக் பிரச்சாரம் மூலம் அணுக முடியும் என்பதால், அரசியல் கட்சிகள் இந்த வகை பிரச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. கொளுத்தும் வெயிலில் அலைந்து திரியாமல், வாக்காளர்களை எளிதில் கவர உதவும் பேஸ்புக் ‘மீம்ஸ்’ பிரச்சாரம் இனி வரும் தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x