Published : 23 Mar 2019 07:45 AM
Last Updated : 23 Mar 2019 07:45 AM

அரசியல் அனல் பறக்கும் தேனி; ஓபிஎஸ் மகன் - தங்க தமிழ்ச்செல்வன் கடும் மோதல்

தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவ தால், தேர்தல் களத்தில் இத்தொகுதி கவனம் ஈர்க்கத் தொடங்கி உள்ளது. சொந்த மாவட்டத்தில் தங்கள் அரசியல் செல்வாக்கை காட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இந்தத் தேர்தல் ஒரு சவாலாக அமைந்துள்ளது. இத னால் தமிழகத்திலேயே இந்த முறை தேனியில் பிரச்சாரம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை எதிர்த்து டி.டி.வி.தினகரன் யாரை நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடையே இருந்தது. "நானே கூட போட்டியிடலாம்" என்ற தினகரனின் பேச்சால், இத்தொகுதி யில் அதிமுகவுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு பலமான வேட்பாளரை அவர் நிறுத்தவுள்ளது தெரியவந்தது. அதன்படி இங்கு டி.டி.வி.தினகரன், அவரது உறவினர் இளவரசியின் மகன் விவேக், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதி யில் அமமுக வேட்பாளராக தங்க தமிழ்ச் செல்வன் போட்டியிடுவார் என தினகரன் அறிவித்துள்ளார்.

அமமுகவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தேனியும் ஒன்று. அதோடு, அரசியலில் எதிர்எதிர் துருவங்களாகச் செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், தங்கதமிழ்ச்செல்வனுக்கும் சொந்த மாவட்டம் என்பதால் இந்தத் தொகுதி தனி கவனம் பெற்றுள்ளது. அதிமுகவில் இருந்தபோதே ஓ.பன்னீர்செல்வமும், தங்க தமிழ்ச்செல்வனும் ஒருவருக்கு ஒருவர் எதிராக அரசியல் செய்து வந்தனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு சசிகலா குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததால், தேனி மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஓரம் கட்டப்பட்டார். கட்சியில் மாநில அளவிலான பொறுப்புகளைப் பெற்ற ஓ.பன்னீர்செல்வம், வழக்கு காரணமாக ஜெயலலிதா பதவி விலக நேரிட்டபோது முதல்வராகும் நிலைக்கு உயர்ந்தார். இதன் காரணமாகவும், கட்சிக் கட்டுப்பாடு காரணமாகவும் தங்க தமிழ்ச்செல்வனால் வெளிப்படையாக எதையும் கூற முடியவில்லை. அதே நேரம், ஜெயலலிதாவின் கரிசனத்தால் மாவட்ட செயலாளர், எம்எல்ஏ பதவிகளை தங்க தமிழ்ச்செல்வன் வகித்து வந்தார். அதற்கு மேல் அவரால் கட்சியில் வளர முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர், முதல்வர் கே.பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்டார். கட்சியும், ஆட்சியும் இபிஎஸ் - ஓபிஎஸ் வசம் சென்றது.

இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் சசிகலா குடும்பத்தின் ஆதரவாளராக மாறி னார். குறிப்பாக, டி.டி.வி.தினகரனின் தீவிர விசுவாசியாகச் செயல்பட்டு வருகிறார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் மீது கடுமை யான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.

தற்போது அமமுகவில் டி.டி.வி. தினகரனுக்கு அடுத்த இடத்தில், கொள்கைப் பரப்புச் செயலாளராக தங்கதமிழ்ச்செல்வன் இருக்கிறார். இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு எம்எல்ஏ பதவியை இழந்தார். தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் மகன் போட்டியிடுவதால், அவருக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கியுள்ளார். தமிழகத்திலேயே அனல் பறக்கும் பிரச்சாரம் தேனியில் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

"ஓபிஎஸ்சுடனான தனது அரசியல் கணக்கை தீர்த்துக்கொள்ளவும், மாவட்டத் தில் தனக்குள்ள செல்வாக்கை காட்ட ஒரு வாய்ப்பாகவும் தங்க தமிழ்ச்செல்வன் இத்தேர்தலை கருதுகிறார். எனவே போட்டி கடுமையாக இருக்கும்" என அமமுகவினர் கூறுகின்றனர். இதனால், தேனி தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x