Published : 22 Mar 2019 01:02 PM
Last Updated : 22 Mar 2019 01:02 PM

தீவிர அரசியலில் களமிறங்கும் உதயநிதி; வியூகத்தின் பின்னணி என்ன?

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபடும் உதயநிதி ஸ்டாலின் 2021-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளராகக் களம் காண உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

'கண்ணே கலைமானே' படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கி வரும் 'சைக்கோ' மற்றும் மாறன் இயக்கி வரும் 'கண்ணை நம்பாதே' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். சமீபகாலமாக திமுக நடத்தும் கண்டனப் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் உதயநிதி ஸ்டாலின் தலைக்காட்டத் தொடங்கினார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றுக்கான பிரச்சாரங்களில் உதயநிதி ஸ்டாலின் தலை காட்டவில்லை. திருவெறும்பூர் தொகுதி இடைத்தேர்தலில் நின்ற தனது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்காக மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆனால், இம்முறை திமுக போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கு நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இந்தப் பயணத்தை மார்ச் 21-ம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு பிரச்சாரம் செய்யத்  தொடங்கினார். அங்கிருந்து தொடங்கப்படும் உதயநிதியின் பிரச்சாரப் பயணம் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில், மிஷ்கின் இயக்கி வரும் 'சைக்கோ' படத்துக்காக கடலூரில் நடைபெறவுள்ள இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 2 நாட்கள் கலந்து கொள்ளவுள்ளார். அதுவும் காலையில் பிரச்சாரம், இரவில் படப்பிடிப்பு என உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்

பிரச்சாரத் திட்டங்கள்

2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக உதயநிதி ஸ்டாலின் களம் காணவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் முன்னோட்டமாக தற்போது தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், உதயநிதியின் இந்தப் பயணத்துக்கு தனியாக பிரச்சார வாகனம், பேச்சுகளுக்காகக் குறிப்புகள் கொடுப்பது என பலர் பணிபுரிந்துள்ளனர்.  அதே போன்று, இந்தப் பிரச்சாரப் பயணத்தில் தன் மீது விழவுள்ள வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முழுமையாகப் போக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார் உதயநிதி. தேர்தலுக்குப் பிறகும் கூட நடைபெறவுள்ள முக்கியமான திமுக பொதுக்கூட்டங்களில் உதயநிதி இடம்பெற உள்ளார்.

நல்ல கதைகளில்  நடிக்க முடிவு

தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதால், இனி நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கும் வந்துள்ளார் உதயநிதி. மேலும், எந்தவொரு காரணம் கொண்டும் தான் நடிக்கும் படங்களில் அரசியலைக் கலக்காமல் இருக்க வேண்டும் என்ற உறுதியும் எடுத்துள்ளார். இனி, தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் நல்ல படங்களை வெளியிடுவதில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளார். இதற்காக தனியாக ஒரு குழு பணிபுரிந்து வருகிறது.

தற்போது உதயநிதி இறங்கியுள்ள வேகத்துக்கு, அடுத்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அவருடைய அரசியல் ஆரூடமாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

'தலைமை தான் முடிவு செய்யும்'

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்கப் போகிறீர்களாமே என்ற கேள்வியை உதயநிதியிடம் கேட்ட போது, "அதை தலைமை தான் முடிவு செய்யும்" என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x