Published : 22 Mar 2019 01:05 PM
Last Updated : 22 Mar 2019 01:05 PM

சென்னையில் தேர்தல் பறக்கும்படை சோதனை: 9 கிலோ தங்கம், 59 கிலோ வெள்ளி,ரூ.30 லட்சம் பணம் பறிமுதல்

தேர்தலையொட்டி பறக்கும்படை அதிகாரிகள் வடசென்னையில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 9 கிலோ தங்கம் மற்றும் தங்கக்கட்டிகள், 42 கிலோ வெள்ளி மற்றும் வெள்ளிக்கட்டிகள், ரூ.30 லட்சம் ரொக்கப்பணம் பிடிபட்டன.

நாடாளுமன்ற தேர்தல் நடப்பதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் தருவதை தடுக்க பறக்கும்படை அமைத்து தமிழகம் முழுதும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஏடிம்மில் பணம் நிரப்ப கொண்டுச்சென்ற பணம் ரூ.4.5 கோடி உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடந்து வருகிறது.

இன்று அதிகாலை 5 மணி அளவில், சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் நடைப்பெற்ற பறக்கும்படை சோதனையில் ஹுண்டாய் காரில் ஆவணமின்றி தங்க நகைகளை கொண்டு வந்த பார்க்டவுன் இருளப்பன் தெருவைச்சேர்ந்த லோகேஷ் கந்தெல்வெல் என்பவரிடமிருந்து 6 கிலோ 800 கிராம் தங்க நகைகள் தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

இதில் 5.53 கிலோ தங்க நகைகளும் 750 கிராம் எடையுள்ள 5 தங்கக்கட்டிகளும் அடக்கம். மேற்கண்ட நகைகள் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதால் அவை தண்டையார்ப்பேட்டை அரசு கஜானாவில் ஒப்படைக்கப்பட்டது.

இதேப்போன்று கொண்டித்தோப்பு நைனியப்பன் தெருவைச்சேர்ந்த சசிகாந்த் (36) என்பவர் அதே பகுதியில் உள்ள எடப்பாளையம் தெரு க்கு 3.6 கிலோ வெள்ளிபார் மற்றும் 6 கிலோ வெள்ளி பழைய மற்றும் புதிய பொருட்களை எடுத்து வரும் வழியில் பறக்கும் படையிடம் பிடிபட்டார். இவைகளுக்கு உரிய ஆவணம் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேப்போன்று யானைக்கவுனி, அனுமந்த் ராயன் தெருவில் உள்ள நகை பாலீஸ் செய்யும் கடையிலிருந்து  ஜெகதீஷ் (32),  விஷால் (23), முகேஷ் (22) , விபூல் (28) ,அஜித் (19) ஆகியோர் 17 கிலோ மற்றும் 30 கிலோ வெள்ளி விளக்கு மற்றும் பாத்திரத்தை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள பாலாஜி ஜூவல்லர்ஸ்க்கு எடுத்துவரும் வழியில் பறக்கும்படையிடம் சிக்கினர்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேப்போன்று கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கீவன் ஜெயின்(51) என்பவர் கீழ்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து ரூ.30 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 1.7 கிலோ தங்கத்தை எடுத்துவரும் போது இன்று காலை 9.50 மணி அள்வில் என்.எஸ்.சி  போஸ் சாலை தேவராஜ முதலி தெரு சந்திப்பில் பறக்கும்படையிடம் சிக்கினார். உரிய ஆவணம் இல்லாததால் அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x