Published : 22 Mar 2019 06:33 AM
Last Updated : 22 Mar 2019 06:33 AM

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளுக்கான கல்விக்  கட்டணம் விரைவில் மாற்றம்: நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் குழு முடிவு

தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிஎட், எம்எட் உள்ளிட்ட படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், உடற் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளும் ஒருசில கல்லூரிகளில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி.,பிஎட், மற்றும் பிஏ.,பிஎட் படிப்புகளும் (ஐந்தாண்டு காலம்) உள்ளன.

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் தொடக்க கல்வி டிப்ளமோ (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) படிப்புகளும், உடற்கல்வியியல் கல்லூரிகளில் பிபிஎட், எம்பிஎட் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. தனியார் கல்லூரிகளின் கட்ட ணத்தை ஒழுங்குபடுத்த நீதிபதி என்.வி. பாலசுப்ரமணியன் கட்டண நிர்ணயக் குழு இயங்கி வருகிறது. இக்குழு கடந்த 2016-ம் ஆண்டு கட்டணம் நிர்ணயித்தது. இக்கட்டணம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால், புதிய கட்டணத்தை நிர்ணயிக்க உள்ளது. புதிய கல்விக் கட்டணம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2019-20, 2020-21, 2021-22) அமலில் இருக்கும்.

கல்லூரிகள் சார்பில் எதிர்பார்க் கும் உத்தேச கல்விக் கட்டணம், வழங்கப்படும் படிப்புகள், உள் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்களை மார்ச் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இக்குழு தகவல் அனுப்பியுள்ளது. கல்லூரிகள் தரப்பில் தரப்படும் கல்விக் கட்டணம் ஆய்வு செய்யப்பட்டு அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள், கட்டிட வசதிகள், ஆய்வக வசதிகளை கருத்தில் கொண்டு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

தற்போதைய கல்விக் கட்டணம் (ஆண்டுக்கு) டிடிஎட் - ரூ.15,000, பிஎட் - ரூ.37,500, எம்எட் - ரூ.38,000, பிபிஎட் - ரூ.20,000, எம்பிஎட் - ரூ.22,500, பிஎஸ்சி.பிஎட். - ரூ.25,000, பிஏ.பிஎட். - ரூ.22,500 என்று உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x