Last Updated : 22 Mar, 2019 07:23 AM

 

Published : 22 Mar 2019 07:23 AM
Last Updated : 22 Mar 2019 07:23 AM

எம்ஜிஆர் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம்- அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

பாஜகவுடன் கூட்டணி அமைந்தபோதிலும், எம்ஜிஆரின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்படியிருக்க, இந்த முறை கூட்டணி சேர்ந்தது ஏன்?

சூழலுக்கு தகுந்தவாறு கூட்டணி அமைப்பது வழக்கமானதுதான். 1967-ல் அண்ணா முதலில் காங்கிரஸை வீழ்த்த, எதிராக இருந்த சுதந்திரா கட்சியுடன் இணைந்தார். அதன்படி, காலத்தின் தேவை, மாநிலத்தின் தேவை, சூழல் கருதி இயற்கையான கூட்டணி அமைந்துள்ளது.

பாஜகவின் நிர்ப்பந்தத்தில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டதா?

இது திட்டமிட்டு பரப்பப்படும் தகவல். தவறான பிரச்சாரம். இந்ததகவலை மறுக்கிறேன். தமிழகத்தில் பாஜகவுக்கு நாங்கள் வால்பிடிக்கவும் இல்லை. நிர்ப்பந்தத்துக்கு பணியவும் இல்லை. ‘கட்டுண்டு வாழோம்; சமநிலையில் இணைவோம்; பிரிவினை நாடோம்’என்ற எம்ஜிஆர் கொள்கையை ஒருபோதும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்களுக்கு என தனித்தன்மை, அடையாளம் உள்ளது. நிர்ப்பந்தம் செய்வதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல. தவிர, அந்த கூட்டணிகூட அதிமுக தலைமையில்தான் அமைந்துள்ளது.

அதிமுகவையும், தலைவர்களையும் கடுமையாக விமர்சித்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தொண்டர்கள் விரும்பினார்களா?

பொதுவாக ஒவ்வொரு கட்சியும் அவர்களுக்கான கொள்கைகளில் உறுதியாக இருப்பார்கள். கூட்டணிவிஷயம் அப்படி அல்ல. நேற்று வரை அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். கூட்டணி அமைந்துவிட்டால், அந்த கருத்தை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்த மக்களவைத் தேர்தலை அதிமுக எப்படி சந்திக்கிறது?

ஜெயலலிதா இருந்தால் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு, சிந்தாமல், சிதறாமல் கட்சி வழிநடத்தப்பட்டு வருகிறது. வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் பகிர்வு ஆகியவைகூட அவரது கனவின்படிதான். அவரது ஆசிர்வாதம் இருக்கும்போது, 18 சட்டப்பேரவை தொகுதிகள், 40 மக்களவைத் தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

திமுக போல அதிமுகவிலும் வாரிசு அரசியல் தலைதூக்கியுள்ளதே?

இதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவில் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய அடிப்படை தகுதி. நேற்று கட்சியில் இணைந்தவர்களுக்கு இன்று தேர்தலில் போட்டியிட சீட் என்று அளிக்கப்படவில்லை. கட்சிப்பணி ஆற்றியவர்களுக்கு சீட் பெறுவதற்கான உரிமை உள்ளது. அதை மறுக்கக்கூடாது.

தற்போதைய எம்.பி.க்களில் 6பேருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்புதரப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறதே?

ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிற இயக்கம். இதில், எல்லோரும் தகுதி படைத்தவர்கள்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை வாய்ப்பு வழங்கப்படுகிறது. போன தடவை ரயில் கிடைத்தது. இந்த முறை ‘மிஸ்’ ஆகிவிட்டது. நிச்சயம் அடுத்தமுறை ரயிலில் ஏறிக்கொள்ளலாம். அது எல்லோருக்கும் தெரியும். நான் கடந்த 1984,89-ல் சீட் கேட்டேன். கிடைக்கவில்லை. அதற்காக கட்சிப்பணியில் நான் தொய்வு காட்டவில்லையே. மாறாக, அதில் வேகத்தை கூட்டினேன். 1991-ல் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. கடமையை செய்தால் அதிமுகவில் கட்டாயம் அங்கீகாரம் கிடைக்கும்.

ஜெயலலிதா கடந்த முறை ‘மோடியா? இந்த லேடியா?’ என்றுகேள்வி எழுப்பி வாக்கு சேகரித்தார். இந்த முறை பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது, எந்த கோஷத்தை முன்னிறுத்துவீர்கள்?

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கே நாம் முன்னுரிமை தரவேண்டும். அதற்கான பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும். ‘மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்; மாநிலத்தின் உரிமையை நாம் பெறுவோம்’ என்பதே கோஷம்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ரூ.1,500 வழங்கும் திட்டம் குறித்து நீங்கள் கூறியதை திமுக புகாராக அளித்துள்ளதே?

திமுக எப்போதுமே புகார் அளிக்கும் கட்சி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருத்தப்பட்ட தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து பேசினார். அதுவும் வாக்காளர்களை கவரும் விஷயம்தானே. தவிர, தேர்தல் அறிக்கையில் உள்ளதைத்தான் கூறினேன். நானாக எதுவும் கூறவில்லை.

ஆர்.கே.நகர் போல, இந்ததேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என்கிறாரே தினகரன்?

தினகரன் பெற்றது தற்காலிகமான மோசடியான வெற்றி. பணம் தருகிறேன் என்று டோக்கன் கொடுத்து பெற்ற வெற்றி. அதன் தாக்கம், அவரால் தொகுதிக்கே செல்ல முடியவில்லை. இந்த நேரத்தில் அந்த வெற்றி கைகொடுக்காது. நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் அவர்கள் டெபாசிட் இழப்பார்கள்.

மாநில அரசுகளை மத்திய பாஜகஅரசு அடக்கி ஆண்டதாக ராகுல் காந்தி பேசியுள்ளாரே?

சாத்தான் வேதம் ஓதுவது போலஉள்ளது. அவர்களது ஆட்சிகளில் எத்தனையோ அரசுகள் கலைக்கப்பட்டன. அதுபோல, பாஜக ஆட்சியில்கலைக்கப்பட்டதா? அவர்கள் பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x