Published : 22 Mar 2019 05:57 AM
Last Updated : 22 Mar 2019 05:57 AM

ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்க தேனியை தேடி வருவாரா தினகரன்?- விரைவில் அறிவிப்பு வரும்

தேனி தொகுதிக்கு அமமுக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதிமுக வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரை எதிர்த்து டிடிவி தினகரன் அல்லது இளவரசி மகன்விவேக் நிறுத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளது. விரைவில் சசிகலாவை சந்தித்த பிறகு, வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

தேனி மக்களவைத் தொகுதியில் கடந்த 2014-ல் அதிமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றார். தற்போது அதிமுக சார்பில் துணைமுதல்வரும் அக்கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் களம் இறக்கப்பட்டுள்ளார்.

பிரச்சாரம் தொடங்கினார்

சோழவந்தான் தொகுதியைச்சேர்ந்த அலங்காநல்லூரில் ரவீந்திரநாத் குமார் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த் துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமமுக சார்பில் இதுவரை 24 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மற்ற தொகுதிகளுக்கு டிடிவி தினகரன் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. திண்டுக்கல்லில் அதிமுக போட்டியிடாததால் அக்கட்சியின் வாக்கு வங்கியைக் குறிவைத்து அமமுக சார்பில் பலமான வேட்பாளரைத் தேடுவதாகக் கூறப்படுகிறது.

தேனி தொகுதியில் இன்னும் வேட்பாளரை அறிவிக்காதது ஓபிஎஸ் மற்றும் அவரது மகனுக்குகலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ‘‘தேனியில் நானேகூட நிற்கலாம்’’ என்று தினகரன் பொடிவைத்துப் பேசினார். அதேநேரத்தில் அமமுக சார்பில் இளவரசி மகன் விவேக்கை நிறுத்த ஏற்பாடு நடப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விவேக் நிற்க மறுப்பதாகவும் அதனால், தினகரனே கூட தேனியில் களம் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சறுக்கல் ஏற்படுத்த திட்டம்

அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அரசியல் செய்பவர். தினகரனும் தங்க தமிழ்ச்செல்வனும் அரசியல் ரீதியாக ஓபிஎஸ்ஸுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள். அதனால், அவர்கள் தேனி தொகுதியில் நிற்கும் ரவீந்திரநாத்குமாரை வீழ்த்துவதன் மூலம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அரசியலில் சறுக்கலை ஏற்படுத்த நினைப்பதாக விவரம்அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் என்பதோடு செல்வாக்கும் பெற்றிருக்கும் தினகரன்போட்டியிட்டால் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை வீழ்த்தலாம் என்பது அமமுகவினரின் கணக்கு. இதுகுறித்து அமமுகவினர் கூறியதாவது:

தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு செல்வாக்கான தொகுதிதேனி. அதிமுக இரண்டாகஉடைந்து, அந்தக் கட்சியில்இருந்து அமமுக உருவாகியுள்ளது. தற்போது வரை தினகரன், விவேக் அல்லது முன்னாள் அமைச்சர் துரைராஜின் மகனும் சேடப்பட்டி அமமுக ஒன்றியச் செயலாளருமான தனராஜ் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சசிகலாவை சந்தித்த பிறகு, தேனி தொகுதி வேட்பாளரை தினகரன் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர்கள் கூறினர். ஓபிஎஸ் மகனை எதிர்த்து டிடிவிதினகரன் போட்டியிடப்போவதாக வெளியாகும் தகவலால், தேனி தொகுதி அதிக கவனத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x