Published : 21 Mar 2019 06:55 AM
Last Updated : 21 Mar 2019 06:55 AM

பாலாறு பற்றிய வாக்குறுதி இல்லாததால் ஏமாற்றம்: அதிமுக, திமுகவை எதிர்த்து வேலூரில் வேட்பாளர் நிறுத்தம்- பாலாறு பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு

பாலாறு பிரச்சினையில் அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி வேலூர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்த பாலாறு பாதுகாப்பு சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் 48 கிமீ தொலைவு ஓடும் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியுள்ளன. இதன் மூலம் ஆந்திர மாநில வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் தமிழக பாலாற்றுக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் அதிமுக தேர்தல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாலாறு பிரச்சினை குறித்து ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை. திமுகவோ பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்ட முன்னுரிமை அடிப்படையில் மத்திய அரசை வலியுறுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது. தென்பெண்ணை- பாலாறு இணைப்புத் திட்டம், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கையை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவது குறித்த எந்த வாக்குறுதியும் இல்லாததால் வேலூர் மாவட்ட மக்களும் விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில பொதுச் செயலாளரும் பாலாறு பாதுகாப்பு சங்கத்தின் தலைவரு மான ஏ.சி.வெங்கடேசன் கூறும்போது, ‘‘பாலாறு என்பது வட தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்ட மக்களின் பிரச்சினை. இதை அதிமுக, திமுகவினர் முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டவில்லை. தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த அறிவிப்பு என்ன ஆனது என்றே தெரியவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் தண்ணீரே இல்லாத பாலாற்றில் தடுப்பணை கட்டப்படும் என்று கூறியிருப்பது தீர்வு கிடையாது.

பாலாறு பிரச்சினை குறித்து அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாலாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x