Published : 20 Mar 2019 12:59 PM
Last Updated : 20 Mar 2019 12:59 PM

கார் மீது தாக்குதல்: உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சாதிக்பாட்சா மனைவி காவல் ஆணையரிடம் மனு

தனது கார் மீது தாக்குதல் நடத்தியதால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல் ஆணையரிடம் மறைந்த சாதிக்பாட்சாவின் மனைவி மனு அளித்துள்ளார்.

சென்னை தி.நகரில் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற பெயரில்  ரியல் எஸ்டேட் நிறுவனம்  நடத்தி வந்தவர் சாதிக்பாட்சா. இவருக்கு ரெஹானா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் ஆ.ராசாவுக்கு நெருக்கமானவர் என்ற நிலையில் இவர் நிறுவனத்தில் ஆ.ராசா முதலீடு செய்திருந்தார் என்று குற்றச்சாட்டும் அப்போது கூறப்பட்டது.

2ஜி வழக்கு உச்சத்தில் இருந்த நேரத்தில் சாதிக்பாட்சா வீட்டிலும் 2010-ம் ஆண்டு சிபிஐ சோதனை செய்தது. சோதனை நடந்த சில மாதங்களில் சாதிக்பாட்சா திடீரென தற்கொலை செய்துகொண்டார் என்று  தகவல் வெளியானது.

சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அப்போது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி விசாரணை கேட்டன. சாதிக்பாட்சாவின் மனைவி மற்ற உறுப்பினர்களிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் சிபிஐ விசாரணையில் வேகம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹானா பானுவிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹானா பானு இன்னோவா காரில் துரைப்பாக்கம் சென்று கொண்டிருந்தபோது பள்ளிக்கரணை அருகே கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடந்தினர். இதையடுத்து தன்னைத் தாக்கவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹானா பானு காருடன் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்துள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் தனக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என ரெஹானா பானு புகார் அளித்துள்ளார். பொதுவாக தேர்தல் நேரத்தில் சாதிக்பாட்சா விவகாரம் வெளிவரும். இதுவும் அதுபோன்ற ஒன்றுதானா? என போலீஸ் தரப்பில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x