Published : 20 Mar 2019 07:53 AM
Last Updated : 20 Mar 2019 07:53 AM

குருவிகளை வீட்டுக்கு வரவழைக்க என்ன செய்யலாம்?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் வரும்போதுதான், ‘சிட்டுக்குருவிகளைக் காணவில்லை, சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது' என்று கவலைப்படுகிறோம். ஆனால், சிட்டுக்குருவிகளை மீட்டெடுக்கும் செயல் திட்டங்களை செயல்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

சிட்டுக் குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இயற்கை ஆர்வலர்களும், சூழல் விழிப்புணர்வு தொண்டு நிறுவனத்தினரும் மக்களிடையே எடுத்துரைத்தாலும் முறையான, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யாத முடிவுகள், மூட நம்பிக்கைகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே மக்களைச் சென்றடைகின்றன.

இது குறித்து மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது:

சீட்டுக் குருவிகள் உங்கள் வீடுகளுக்கு வர வேண்டும் என்றால், உங்கள் வீட்டில் கொஞ்சம் நிழல் உள்ள பகுதிகளில் பறவைகளின் கண்ணில் படும்படியான இடத்தைத் தேர்வு செய்து அங்கே தினமும் கம்பு, தினை, அரிசி போன்ற தானியங்களை ஒரு தட்டில் வையுங்கள்.

பின்னர் அதன் அருகிலேயே ஒரு மண் கலையத்தில் தண்ணீரும் வையுங்கள்.

சில வாரங்களில் சின்னஞ்சிறு பறவைகள் ஒன்று, இரண்டாக வரத் தொடங்கும். அடுத்த சில நாட்களில் காகம், மைனா, புறா போன்ற பறவைகள் மிகச் சாதாரணமாக வரத் தொடங்கும். சிறிது நாட்களில் சிட்டுக்குருவிகளும் வரும். அவை தினமும் வரத் தொடங்கிய பின் கூடு அமைப்பதற்கு எளிதாக சிறிய மரப்பெட்டிகள், மூங்கில் குழல்கள் அல்லது அட்டைப் பெட்டியை யார் கைக்கும் எட்டாத உயரத்தில் உறுதியாக அசையாதவாறு இணைத்து வையுங்கள். பெட்டிக்குள் குருவிகள் செல்லும் துவாரத்தை சிறிதாக ஒன்றரை அங்குலத்தில் வைக்க வேண்டும்.

இனப்பெருக்க காலம் தொடங்கியவுடன் குருவிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கும். பின்னர் வலிமையான பறவைகள் அந்தக் கூட்டை நாடி வரும். இணை சேர்ந்து கூடு அமைத்த பின்னர் மூன்றில் இருந்து நான்கு முட்டைகள் வரை இட்டு, பதினாறு நாட்கள் அடைகாத்து குஞ்சுகளைப் பொறிக்கும்.

முட்டையில் இருந்து வெளியில் வந்த குஞ்சுகள் தாயிடமிருந்து புழு, பூச்சி போன்ற புரதமிக்க உணவைப் பெற்று விரைந்து வளரும். குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைந்த பதினாறு நாட்களில் கூட்டை விட்டு வெளியேறும். பின்னர் சிறிது காலம் தாயுடன் திரியும். ஓரிரு மாதங்களில் இக்குஞ்சுகள் தங்களின் வாழ்க்கையைத் தனியாக தொடங்கும். நம்மால் பெரிய காடுகளைக் காப்பாற்ற முடியாவிட்டாலும்கூட இந்த சின்னஞ் சிறு சிட்டுக்குருவிகளைக் காப்பாற்றி மனிதம் காப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x