Last Updated : 18 Mar, 2019 06:06 PM

 

Published : 18 Mar 2019 06:06 PM
Last Updated : 18 Mar 2019 06:06 PM

திமுக- அதிமுக வேட்பாளர்களாக அண்ணன்- தம்பி; வேட்டு வெடித்துக் கொண்டாடிய கட்சியினர்: போலீஸார் வழக்குப் பதிவு

தேனி சகோதரர்கள் இருவர் திமுக, அதிமுக வேட்பாளர்களாக ஆண்டிபட்டி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டனர். இதை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய இரு தரப்பினர் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி எம்ஜிஆர் காலத்தில் இருந்தே தமிழக அளவிலான கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் இங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு திமுக, அதிமுக சீட் வழங்கி வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளது. இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது

ஆண்டிபட்டி தொகுதி திமுக ஒன்றியப் பொறுப்பாளர் மகாராஜன். இவர் நேற்று முன்தினம் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களிலே இவரது தம்பி அதிமுக.ஒன்றியச் செயலாளர் லோகிராஜனை அதிமுக வேட்பாளராக அறிவித்தது.

இருவருக்குமே இது முதல் தேர்தல். பெரிய அளவில் கான்ட்ராக்ட் தொழில் செய்த வருபவர்கள் இவர்கள். சகோதரர்கள் எதிரும் புதிருமாக களம் இறங்கியது கட்சி கடந்து பலரிடையேயும் ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வேட்பாளராக அறிவித்ததும் இருதரப்பும் ஆர்வ மிகுதியில் பட்டாசுகளை வெடித்து ஆரவாரத்தில் இறங்கியது.

இதைப் பார்த்த தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் அண்ணன் தரப்பைச் சேர்ந்த திமுக பேரூர் கழகச் செயலாளர் திருமலை மீதும், தம்பி அணியைச் சேர்ந்த ஆண்டிபட்டி அதிமுக பேரூர்  கழகச் செயலாளர்  முத்துவெங்கட்ராமன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மகாராஜன் நேற்று மாலை செக்போஸ்ட் பகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். தம்பி லோகிராஜன் சென்னையில் இருந்து திரும்பியதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x