Published : 18 Mar 2019 03:59 PM
Last Updated : 18 Mar 2019 03:59 PM

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச்சுவர் இடிப்பு: அரசியல் உள்நோக்கம் கொண்ட பழிவாங்கும் நடவடிக்கை; மார்க்சிஸ்ட் கண்டனம்

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பெரியாரால் உருவாக்கப்பட்ட, திருச்சி, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் சுற்றுச்சுவரை அதிமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இடித்து தகர்த்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மழலையர் பள்ளி, பெண்கள் பயிலும் பள்ளி மற்றும் முதியோர் இல்லம் இயங்கி வரும் சூழ்நிலையில், உரிய முறையில் சர்வே செய்யாமல், 1.80 மீட்டர் ஆக்கிரமிப்பு என கடிதத்தில் தெரிவித்த பின்பு, 6 மீட்டர் அளவு ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்துத் தள்ளியிருப்பதன் மூலம் அதிமுக அரசு அரசியல் வன்மத்துடன் இடித்துள்ளது என்பது தெளிவாகிறது.

திருச்சி - தஞ்சை சாலையில், வல்லம் - திருமலைசமுத்திரம் அருகே உள்ள சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் சிறைத்துறைக்கான இடத்தை ஆக்கிரமித்து உள்ளதை அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் சுற்றுச்சுவரை அன்னை மணியம்மையார் நினைவு நாளில் அவசர அவசரமாக இடித்துத் தள்ளியிருப்பது அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

தமிழக அரசின் இந்த மோசமான நடவடிக்கையை கண்டிப்பதோடு, ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் கண்டனக் குரலெழுப்ப வேண்டும்" என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x