Published : 18 Mar 2019 03:12 PM
Last Updated : 18 Mar 2019 03:12 PM

ராமநாதபுரமா...தென் சென்னையா?- குழப்பத்தில் கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதா அல்லது தென் சென்னையில் போட்டியிடுவதா என்ற ஆலோசனை தொடர்ந்து நடந்து வருகிறது.

மக்களவைத் தேர்தல் நடைபெற ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. பிரச்சாரத்தையும் தொடங்க ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனித்துப் போட்டியிடுவது ஏறக்குறையாக உறுதியாகியுள்ளது. வேட்பாளர் தேர்வில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். கமீலா நாசர், ஸ்ரீபிரியா, கோவை சரளா, மகேந்திரன் என அக்கட்சியின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களையும், அவர்களுக்கு ஏற்ற தொகுதிகளையும் முடிவு செய்வதில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விரும்பி கமல்ஹாசன் அதற்கு ஏற்றவகையில் வியூகங்கள் வகுத்து வந்தார். சொந்த ஊரான பரமக்குடி ராமநாதபுரம் தொகுதியில் உள்ளதால் இங்கு போட்டியிட கமல்ஹாசன் விரும்பியதாகத் தெரிகிறது.

மேலும் அதிமுக மற்றும் திமுக ஆகிய இருகட்சிகளும் இந்தத் தொகுதியில் போட்டியிடாமல் கூட்டணிக்கே ஒதுக்கீடு செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் போட்டியிடுகின்றன. இதனால் சாதகமான தொகுதியாக ராமநாதபுரம் கருதப்பட்டது.

குடிநீர் பிரச்சினை உள்ளிட்டவற்றை முன் வைத்து சில நாட்களாகவே மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பாகவே பிரச்சாரங்களும் தீவிரமாக நடந்து வந்தன.

இந்நிலையில் தென் சென்னையில் கமல்ஹாசன் போட்டியிடலாம் என சில நிர்வாகிகள் அவருக்கு ஆலோசனைகள் கூறியுள்ளனர். படித்த, மேல் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் தென் சென்னையில் கமல்ஹாசன் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர். இதனால் அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்த ஆலாசனை தொடர்கிறது.

இதுகுறித்து கமல்ஹாசனுக்கு நெருங்கிய வட்டாரம் தரப்பில் விசாரித்தபோது, ''மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அவருக்குச் சாதகமான தொகுதியை இறுதி செய்யம் பணிகள் நடந்து வருகின்றன. ராமநாதபுரத்தை மையப்படுத்தி ஏற்கெனவே சில பணிகள் செய்துள்ளோம். எனினும் தென் சென்னையும் சாதகமான தொகுதி என்பதால் அதுபற்றியும் ஆலோசித்து வருகிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x