Published : 18 Mar 2019 01:57 PM
Last Updated : 18 Mar 2019 01:57 PM

ஸ்டெல்லா மேரிஸ் ராகுல் நிகழ்ச்சி தேர்தல் விதி மீறலா?-தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிக்ழ்ச்சியில் தேர்தல் விதிமீறல் இருந்ததா?என மாவட்டத் தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை அளித்ததன் அடிப்படையில் தமிழக தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 தொடங்கி நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதுமுதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. கடந்த 13-ம் தேதி புதன்கிழமை நாகர்கோவிலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் வந்தார் ராகுல் காந்தி.

சென்னை வந்த அவர் அதற்கு முன்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 3000 மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த ராகுல், அதை தனது அரசியல் பிரச்சார மேடையாக மாற்றிக்கொண்டார்.

பண மதிப்பு நீக்கம், ரஃபேல் விமானக் கொள்முதல், மோடியின் மீதான விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குப் பதிலளித்து அனைவரையும் கவர்ந்தார். அவரது பேச்சும், பதிலளித்த விதமும் இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

அவரது பதில் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில் பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள், தேர்தல் நடத்தைவிதி அமலுக்கு வந்த பின்னர் பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்கிற நடத்தை விதியை காங்கிரஸ் கட்சி மீறியதாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதுகுறித்து பதிலளித்த அவர், ''வேறு நிகழ்ச்சிக்காக ஒப்புக்கொண்டுவிட்டு அரசியல் நிகழ்ச்சியாக நடத்தினாலோ, அல்லது ஓர் அரசியல் கட்சி கல்லூரியில் பேசினாலோ விதிமீறல் ஆகும். இந்த நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகம் ராகுலை எம்.பி. என்கிற முறையில் அழைத்துள்ளது. அது விதிமீறல் ஆகாது'' என தெரிவித்தார்.

இந்நிலையில் கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் இரா. சாருமதி சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அவரது அறிக்கை அடிப்படையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இதில் விதிமீறல் இல்லை என மீண்டும் அறிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சத்யபிதா சாஹு கூறுகையில், ''ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்துள்ளார். அதில், கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையாக அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசிய கல்லூரி நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை'' என தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x