Published : 16 Mar 2019 02:04 PM
Last Updated : 16 Mar 2019 02:04 PM

40 தொகுதிகளில் போட்டியிடக் கள ஆய்வு: 18 சட்டப்பேரவை தொகுதிகளில் தனித்துப் போட்டி; ஜெ.தீபா பேட்டி

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான விருப்ப மனு விநியோகம், நேர்காணல் நடைபெற உள்ளதாக தெரிவித்த ஜெ.தீபா ஒருவேளை தான் போட்டியிட்டால் அது நாடாளுமன்றமாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

''வருகின்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் விருப்ப மனு பெறப்பட உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் நேர்காணல் நடைபெற உள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை போட்டியிட உள்ளது. 40 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஆதரவு எந்த அளவு உள்ளதோ அதை ஒட்டி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவெடுக்க உள்ளோம். 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிட உள்ளோம்''.

இவ்வாறு தீபா தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தீபா பதில் அளித்தார்.

இடையில் காணாமல் போய்விடுகிறீர்கள், மீண்டும் திடீரெனத் தோன்றுகிறீர்கள்?

நான் எனக்குத் தெரிந்து என் வீட்டிலிருந்து வெளியே சென்றே அதிக நாட்கள் ஆகின்றன. நான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட். வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம் என்கிற எண்ணம் உடையவள்.

அரசியல் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று போகிறேன். மிரட்டல் அரசியல் வேண்டாம் என நினைக்கிறேன். கட்சி அரசியலில் இருக்கிறோம். காணாமல் போக முடியாது. நான் ஏற்கெனவே சொன்ன படி என்னையும், இந்த இயக்கத்தையும் அழிக்க பெரிய கூட்டம் இயங்கியது.

அதை சரி செய்ய இத்தனை காலம் பிடித்தது. அதை எல்லாம் களை எடுத்துவிட்டு, சரி செய்துவிட்டு தற்போது வழி நடத்துவதற்காக ஆயத்தமாக இருக்கிறேன். அந்த நேரத்தில் அதிமுகவில் சேர எனக்கு அழைப்பு விடுத்தார்கள். நாங்களும் அணுகினோம்.

நேரம் குறைவாக இருப்பதால் எப்படி போட்டியிட முடியும்?

ஆர்.கே.நகரில் குறைவான காலகட்டம் இருக்கும் நேரத்தில் போட்டியிட்டோம். அன்று நானே வேட்பாளர் என்று கருதப்பட்டேன். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை.

இப்போது இயக்கம் பெரிதாக வளர்ந்துள்ளது. பெரிய அளவில் அரசியல் அமைப்பாக பல மாவட்டங்களில் வளர்ந்துள்ளது. நிறைய அதிகார பலம், பண பலத்தை எதிர்கொள்ளும் விதத்தில்தான் வியூகம் இருக்கும்.

உங்கள் கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

உறுப்பினர் என்று சொல்வதைவிட கட்சி நிர்வாகிகள் 20 ஆயிரம் பேர் உள்ளனர்.

40 தொகுதிகளில் போட்டியிடும் அளவுக்கு வேட்பாளர்கள் உள்ளனரா?

அதுதான் கள ஆய்வு நடத்தி பின்னர் முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளேனே. 18 தொகுதிகளில் போட்டியிட திறமையான கள வேட்பாளர்களை அரைமணி நேரத்தில் என்னால் அறிவிக்க முடியும். ஆனால் 40 தொகுதிகளில் வேட்பாளர் என்பது கள ஆய்வு நடத்திய பின்னர்தான் முடிவெடுக்கப்படும்.

நீங்கள் போட்டியிடும் தொகுதி எதையாவது முடிவு செய்து வைத்துள்ளீர்களா?

நான் போட்டியிடும் எண்ணமில்லை, அப்படி இருந்தால் நாடாளுமன்றம் மூலமாகத்தான் அது இருக்கும்.

இவ்வாறு ஜெ.தீபா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x