Published : 14 Mar 2019 05:13 PM
Last Updated : 14 Mar 2019 05:13 PM

6 சிட்டிங் எம்பிகளுக்கு மீண்டும் சீட் கொடுக்க சிபாரிசு

அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் பாஜக மேலிடம்  மதுரை;மதுரை உள்பட 6 ‘சிட்டிங்’ அதிமுக எம்பிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும்படி, அக்கட்சி மேலிடத்திற்கு பாஜக மேலிடம் அழுத்தம் கொடுப்பதால், உள்ளூர் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள்அதிருப்தியடைந்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டநிலையில் இன்னும் எந்தெந்த தொகுதிகள் எந்த கட்சிக்கு என்று ஒதுக்கப்படவில்லை.

ஆரம்பத்தில் மதுரை தொகுதியை தேமுதிக கேட்டு வந்தது. அவர்களுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கி சமாளித்தனர். பாஜக கட்சி மேலிடம், நாங்கள் நீங்கள் கொடுத்த 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறோம், அதனால், நாங்கள் குறிப்பிடும் தொகுதிகளை தர வேண்டும் என்று அதிமுக கட்சி மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்தது.

அப்படி பாஜக நெருக்கடி கொடுக்கும்தொகுதிகளில் மதுரையும் ஒன்றாக இருந்தது. ஆனால், அதிமுகவுக்கு மதுரை ஒரளவு செல்வாக்கு இருப்பதால் இந்த தொகுதியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று கைவிரித்தது.

அதற்கு பதிலாக திருச்சியை அவர்களுக்கு ஒதுக்குவதாக கூறிவிட்டது. அதனால், மதுரையில் அதிமுக போட்டியிடுவதுஒரளவு உறுதியாகவிட்டநிலையில் ‘சீட்’ பெறுவதில் உள்ளூர் அதிமுகவினர் குடும்பிடி சண்டைப்போடாத அளவிற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

‘சிட்டிங்’ எம்பி கோபாலகிருஷ்ணன், ஓ.பன்னீர் செல்வம் மூலம் காய் நகர்த்தி வருகிறார்.புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா, தனக்கு அமைச்சர் பதவிதான் தரவில்லை, தனது மகன் ராஜ் சத்தியனுக்காவது ‘சீட்’ கொடுத்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறார்.

மகனுக்கு கிடைக்காதப்பட்சத்தில் தனது ஆதரவாளர் வழக்கறிஞர் ரமேஷூக்கு ‘சீட்’ கேட்பதாக கூறப்படுகிறது.  வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெ., பேரவை புறநகர் மாவட்டச் செயலாளர் முன்னாள் தமிழரசனுக்கு ‘சீட்’ கேட்கிறார்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வெளிப்படையாக ஒன்றும், உள்ளுக்குள்ஒன்றுமாக அவரது ‘சிபாரிசு’ இருப்பதால் அவரது மனநிலையை அவரது ஆதரவாளர்களாலே அறியமுடியவில்லை.

மதுரை அதிமுகவில் உள்ளூர் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பாவை மீறி ‘சீட்’ பெறுவது பெரும் சிரமம் என்பதை அறிந்த மதுரை ‘சிட்டிங்’ எம்பி கோபாலகிருஷ்ணன், தற்போது பாஜக மேலிடம் மூலம் அதிமுக மேலிடத்திற்கு ‘சீட்’ கொடுக்க அழுத்தம் கொடுக்கிறார்.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், மதுரை ‘சிட்டிங்’ எம்பி கோபாலகிருஷ்ணனுக்கு ‘சீட்’ கொடுக்க அதிமுக மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த விவரத்தை அறிந்த மதுரை அதிமுக அமைச்சர்கள், உள்ளூர் நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘பாஜக, தமிழகத்தில் தாங்கள் போட்டியிடுவது சொற்ப தொகுதிகள் என்பதாலும், அதில் முழுமையாக வெற்றிப்பெற முடியுமா? என்பதும் அக்கட்சியினருக்கு சந்தேகமாக இருக்கிறது.

அதனால், தங்களுடைய ஆதரவு மற்றும் நட்பு வட்டத்தில் இருக்கக்கூடியமதுரை, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், தென் சென்னை, கள்ளக்குறிச்சி, ஆரணி ஆகிய ‘சிட்டிங்’ அதிமுக ‘சிட்டிங்’ எம்பிகளுக்கு ‘சீட்’ கொடுக்க அதிமுக மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது.

அதற்கு பாஜக மேலிடம் தாங்கள் சிபாரிசு செய்யும் இந்த எம்பிகள், தொகுதி வளர்ச்சித் திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதாகவும், மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டதாகவும், இவர்கள் போட்டியிட்டால் வெற்றிவாய்ப்பு எளிதாகும் என்று காரணம் சொல்கின்றனர். இது அதிமுக கட்சிமேலிடமே ரசிக்கவில்லை.

மேலும், கூட்டணி கட்சி வேட்பாளர் தேர்வில் எப்படி பாஜக தலையிடலாம் என்று உள்ளூர் அதிமுக நிர்வாகிகளும் அதிருப்தியடைந்துள்ளனர். ‘சிட்டிங்’ எம்பிகள் சிறப்பாக செயல்பட்டாளர்களா? இல்லையா? அவர்களுக்கு ‘சீட்’ கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை சொந்தகட்சியினர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஆதங்கப்பட்டுள்ளனர். ஆனால், பாஜக மேலிடம் கருத்துக்கு மதிப்பு அளித்தால் அவர்கள் குறிப்பிடும் இந்த ‘சிட்டிங்’ எம்பிகளுக்கு ‘சீட்’ உறுதி, ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x