Published : 14 Mar 2019 01:57 PM
Last Updated : 14 Mar 2019 01:57 PM

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து அரசாணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க போலீஸார் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நாளுக்கு நாள் மக்களின் கோபாவேசம் காரணமாக போலீஸ் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. மாநிலம் முழுவதும் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும், மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி பரிந்துரைப்பதாக அரசு நேற்று அறிவித்தது. அதுவரை சிபிசிஐடி விசாரணை தொடரும் என கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தேதியில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

''டிஜிபி அளித்த தகவலின் பேரில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து பணம் பறித்த வழக்கில் 24 பிப்ரவரி அன்று புகார் பெறப்பட்டு 354 எ, 354 பி, 392, 66-இ, பெண் வன்கொடுமைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் மேற்கண்ட வழக்குகளில், முகநூல், சமூக வலைதளங்களில், பல்வேறு நாடுகளில் உள்ள ஐபி பதிவுகளை ஆராயவும், முடக்கவும் தேவையான தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய மிக முக்கியமான நிலையில் விசாரணை நடத்தப்படவேண்டி உள்ளதால் கடந்த 12-ம் தேதி டிஜிபி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

பின்னர் மேற்கண்ட வழக்குகளை சிபிசிஐடி போலீஸாரிடமிருந்து, சிபிஐ விசாரணைக்கு மாற்ற டிஜிபி அரசைக் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை அரசு ஆழ்ந்து பரிசீலித்தது. வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீஸாரிடமிருந்து சிபிஐக்கு மாற்றும் பரிந்துரையை டெல்லி போலீஸ் சிறப்புச்சட்டம் 1946 பிரிவு 6-ன் கீழ் பிறப்பித்துள்ளது.

டெல்லி போலீஸ் சிறப்பு உருவாக்க சட்டம் 1946 (மத்தியச் சட்டம் பிரிவு 25 1946)-ன் கீழ் சிபிஐக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x