Published : 14 Mar 2019 09:51 AM
Last Updated : 14 Mar 2019 09:51 AM

6 சிட்டிங் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு; தருமாறு சிபாரிசு அதிமுக வேட்பாளர் தேர்வில் பாஜக தலையீடு: அதிருப்தியில் உள்ளூர் நிர்வாகிகள்

மதுரை உட்பட 6 ‘சிட்டிங்’ அதிமுக எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும்படி, அக்கட்சி மேலிடத்துக்கு பாஜக மேலிடம் அழுத்தம் கொடுப்பதால், உள்ளூர் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் மதுரை தொகுதியை தங்களுக்கு ஒதுக்கும்படி தேமுதிக கோரிவந்தது. அவர்களுக்கு விருதுநகரை ஒதுக்கினர்.

பாஜக மேலிடம், நீங்கள் கொடுத்த 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டு போட்டியிடுகிறோம். அதனால், நாங்கள் குறிப்பிடும் தொகுதிகளை தங்களுக்கு தரும்படி அதிமுகவிடம் நெருக்கடி அளித்தது. அதில் மதுரை தொகுதியும் ஒன்றாக இருந்தது. ஆனால், அதிமுகவுக்கு மதுரையில் ஓரளவு செல்வாக்கும், வாக்கு வங்கியும் இருப்பதால் மதுரையை விட்டுத்தர தயாராக இல்லை. அதற்கு பதிலாக திருச்சியை ஒதுக்குவதாகக் கூறிவிட்டது.

அதனால், மதுரை தொகுதியை பெறுவதில் உள்ளூர் அதிமுகவினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

‘சிட்டிங்’ எம்பி கோபாலகிருஷ்ணன், ஓ.பன்னீர்செல்வம் மூலம் முயற்சித்து வருகிறார். புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, தனக்கு அமைச்சர் பதவிதான் தரவில்லை, தனது மகன் ராஜ் சத்தியனுக்காவது ‘சீட்’ கொடுத்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறார். மகனுக்கு கிடைக்காத பட்சத்தில் தனது ஆதரவாளர் வழக்கறிஞர் ரமேஷூக்கு ‘சீட்’ கேட்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஜெ., பேரவைபுறநகர் மாவட்டச் செயலாளர் தமிழரசனுக்கு ‘சீட்’ கேட்கிறார். அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் மனநிலையை அவரது ஆதரவாளர்களே அறிய முடியவில்லை. மதுரை அதிமுகவில் உள்ளூர் நிர்வாகிகளை மீறி சீட் பெறுவது சிரமம் என்பதால் சிட்டிங் எம்பி கோபாலகிருஷ்ணன் தற்போது பாஜக மேலிடத்தை அணுகி அவர்கள் மூலம் சீட் பெற அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இதன்பேரில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், கோபாலகிருஷ்ணனுக்கு சீட் தர அதிமுக மேலிடத்திடம் பரிந்துரை செய்து வருகிறார். இதை அறிந்த உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “பாஜக, தமிழகத்தில் 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டாலும் அதில் முழுமையாக வெற்றிபெற முடியுமா என்பது அக்கட்சியினருக்கே சந்தேகமாக உள்ளது.

அதனால், தங்களுடைய ஆதரவு மற்றும் நட்பு வட்டத்தில் இருக்கக்கூடிய மதுரை, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், தென் சென்னை, கள்ளக்குறிச்சி, ஆரணி ஆகிய தொகுதிகளின் ‘சிட்டிங்’ அதிமுக எம்பிகளுக்கு ‘சீட்’ கொடுக்க அதிமுக மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இதைஅதிமுக மேலிடமும் எதிர்பார்க்கவில்லை. பாஜக மேலிட செயல்பாட்டால் உள்ளூர் அதிமுக நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால் அதிமுக தலைமை பாஜகமேலிட கருத்துக்கு செவி சாய்த்தால் சிட்டிங் எம்பிக்களுக்கு சீட்ஒதுக்கப்படுவது உறுதி” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x